“கோஹ்லினா செஞ்சுரி.. செஞ்சுரினா கோஹ்லி” இப்படி இருந்த மனுஷன்.. கடைசியா சம்பவம் பண்ணி இன்னையோட சரியா 2 வருஷம் ஆச்சு!!

விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கடைசியாக சதம் அடித்து இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் ஆகியுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் பகல் இரவுகள் டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் விராட் கோலி 136 ரன்கள் அடித்து, சர்வதேச அரங்கில் தனது 70ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்து, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய இரண்டாவது வீரர் என அறியப்பட்டார். 

முதல் இடத்தில் 100 சதங்களுடன் சச்சின் டெண்டுல்கர் இருக்கிறார். இன்னும் சில வருடங்களில் சச்சினின் இந்த சாதனையை விராட் கோலி எளிதாக தகர்த்து விடுவார் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அதற்கு அடுத்து நடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

பின்னர் நடந்த தொடர்களில் எழுபதுகளிலும் எண்பதுகளிலும் பலமுறை விராட் கோலி ஆட்டமிழந்திருக்கிறார். ஆனால் அதனை சதங்களாக அவரால் மாற்ற இயலவில்லை. இரண்டு வருடங்களுக்கு முன்பு, ‘விராட் கோலி என்றால் சதம், சதம் என்றால் விராட் கோலி’ என அழைக்கப்பட்ட அவரால், அதன்பின்னர் ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை என்கிற மோசமான சோதனைக் காலமாக மாறியது. 2009ம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டிலும் விராட் கோலி சதம் அடிக்க தவறியதில்லை.

முதல்முறையாக 2020 ஆம் ஆண்டு அவர் அந்த தொடர்ச்சியான சாதனையை தவறவிட்டார். அடுத்ததாக தற்போது 2021 ஆம் ஆண்டும் ஒரு சதம் கூட தற்போது வரை அவர் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2019ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி சர்வதேச அரங்கில் சதம் விளாசினார். இன்றோடு சரியாக இரண்டு வருடங்கள் ஆகின்றன. 

விராட்கோலி நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கிறார். இப்போட்டி டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. இதில் அவர் சதம் அடிக்கும் பட்சத்தில், 2021 ஆம் ஆண்டுக்கான முதல் சதமாக அது இருக்கும். அடுத்தடுத்து இரண்டு கிரிக்கெட் காலண்டர் வருடங்களில் சதம் அடிக்கவில்லை என்கிற மோசமான சாதனைக்கு இடம் கொடுக்காமல் தவிர்க்கலாம்.