“நம்ம பசங்க கில்லி… நான் சொன்னத சரியா செஞ்சாங்க”; இந்திய அணி வென்றது இப்படித்தான் – ரோகித் சர்மா ஓப்பன் டாக்!!

இந்திய வீரர்கள் நினைத்ததை விட சிறப்பாகவே ஆடினார்.. போட்டிக்கு பிறகு மனம்திறந்து பேசிய ரோகித் சர்மா.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டி ஜார்கண்ட் மாநிலத்தின் ராஞ்சி மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய மார்டின் கப்தில் மற்றும் டெரில் மிட்சேல் இருவரும் இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 4.2 ஓவர்களில் 48 ரன்கள் எடுத்திருந்தபோது மார்டின் கப்தில் 31 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றுமொரு துவக்க வீரர் டெரில் மிட்சேல் 31 ரன்களுக்கு வெளியேறினார்.

அதிகபட்சமாக நியூசிலாந்து அணிக்கு பிலிப்ஸ் 34 ரன்கள் அடித்திருந்தார். இந்திய அணி சார்பில் ஹர்ஷல் பட்டேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்களை நியூசிலாந்து அணி எடுத்திருந்தது. 

இலக்கை துரத்திய இந்திய அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் சர்மா இருவரும் அபாரமாக விளையாடியது. இந்த ஜோடி 117 ரன்கள் சேர்த்திருந்தது. ரோகித் சர்மா 55 ரன்களும், கேஎல் ராகுல் 65 ரன்கள் விளாசினர். 17.2 ஓவர்களில் இந்திய அணி இலக்கை அடைந்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

போட்டிக்கு பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா கூறுகையில், இந்திய வீரர்கள் சிறப்பான பங்களிப்பை கொடுத்தனர். துவக்கத்தில் அதிக ரன்கள் சென்றுகொண்டிருந்தபோது வீரர்களிடம் நான் பேசினேன். ஆட்டம் நமது பக்கம் திரும்புவதற்கு ஒரு விக்கெட் கிடைத்தால் போதும் என கூறியபோது, அதனை வீரர்கள் சரியாக செய்து முடித்தனர்.

மேலும் மிடில் ஓவர்களில் இன்னும் சிறப்பாக பந்துவீசி ரன்களை கட்டுப்படுத்தினர். இறுதியில் ஆட்டம் இந்திய அணியின் பக்கம் திரும்பியது மிகவும் மகிழ்ச்சி. வீரர்களுக்கு முழு சுதந்தரம் கொடுக்கப்படவேண்டும். மீதத்தை அவர்களே பார்த்துக் கொள்வார்கள். ஒருசில பவுண்டரிகளை வைத்து அவர்களை குறைத்து மதிப்பிட இயலாது. அவர்களுடன் பக்கபலமாக இருக்க வேண்டுமே தவிர கட்டுப்படுத்தும் ஒருவராக இருக்க கூடாது. இன்றைய போட்டியில் வீரர்கள் நான் நினைத்ததைவிட மிகவும் சிறப்பாகவே விளையாடினர்” என தெரிவித்திருந்தார்.