இவ்ளோ பெரிய ஆட்டக்காரன போய்.. சின்ன பசங்க கூட கம்பேர் பண்றிங்க”; இந்திய வீரருக்கு முழு ஆதரவு தெரிவித்த பாக்., முன்னாள் வீரர்!!

இந்த இந்திய வீரரை இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களுடன் ஒப்பிடுவது மிகவும் தவறு என ஆதரவு தெரிவித்திருக்கிறார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட்.

இந்திய அணிக்கு இந்த வருடம் மார்ச் மாதம் அறிமுகமான சூரியகுமார் யாதவ், உள்ளூர் போட்டிகளில் நிறைய அனுபவங்களை பெற்றிருக்கிறார். அதேபோல் ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து பல சீசன்கள் சிறப்பாக விளையாடியதன் எதிரொலியாக, தற்போது இந்திய அணியில் இவருக்கு இடம் கிடைத்திருக்கிறது.

நடந்து முடிந்த உலக கோப்பை தொடரிலும் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றே கூற வேண்டும். உள்ளூர் போட்டிகளிலும் ஐபிஎல் தொடரிலும் 3-வது இடத்தில் களம் இறங்கி வரும் இவருக்கு இந்திய அணியில் 4வது இடம் கொடுக்கப்பட்டு வருகிறது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியின் போது, விராட் கோலி பின்வரிசையில் இறங்கி இவருக்கு மூன்றாவது இடத்தை அளித்தார். அதன் பின்னர் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரின் டி20 போட்டிகளில் மூன்றாவது இடத்தில் களம் இறங்கி வந்தார்.

முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின்பு, அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் அதை தவற விட்டார்.  இன்னிலையில் சூரியகுமார் யாதவ் சக இந்திய வீரர்களான இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் இருவருடன் ஒப்பிட்டு பேசப்பட்டு வருகிறார்.

இந்த ஒப்பீட்டை தவறு என கூறிய பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சல்மான் பட், மிகுந்த அனுபவம் உள்ள வீரரை இளம் வீரர்களுடன் ஒப்பிடுவது மிகவும் தவறு என தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார்.  அவர் கூறுகையில், “சூரியகுமார் யாதவுக்கு முப்பது வயதிற்கும் அதிகமாக ஆகிறது.

உள்ளூர் போட்டிகளில் மிகுந்த அனுபவம் பெற்றிருக்கிறார். ஆகையால் இவரது ஆட்டம் நன்கு முதிர்ச்சியாக இருக்கிறது. அணியில் அவரது இடம் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வருகிறார். விரைவில் தொடர்ச்சியான ஆட்டங்களை வெளிப்படுத்தக் கூடிய அத்தனை திறமையும் அவருக்கு இருக்கிறது.

உடனடியாக ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய இத்தகைய வீரரை இஷான் கிஷன் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற இளம் வீரர்களுடன் ஒப்பிட்டு பேசுவது முற்றிலும் தவறு. இது அவரது பேட்டிங்கை மனதளவில் பாதிக்கும். எனவே இன்னும் சில வாய்ப்புகளை அவருக்கு உரிய இடத்தில் கொடுக்க வேண்டும்.” என்று ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.