சிறந்த ஆல்டைம் டெஸ்ட் லெவனை தேர்வு செய்த ஹர்பஜன் சிங்!!! விராட் கோலி, தோனிக்கு இடமில்லை.. இவர்தான் கேப்டனாம்!!

சிறந்த ஆல் டைம் டெஸ்ட் லெவனை தேர்வு செய்திருக்கிறார் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்.

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு ஜாம்பவான்களில் ஒருவராக இருப்பவர் ஹர்பஜன் சிங். இவர் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.

தொடர்ந்து சில ஆண்டுகளாக மூன்றாவது இடத்தில் இவர் இருந்து வந்தார். சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது இவரது இந்த சாதனையை அஸ்வின் முறியடித்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார்.  இந்நிலையில் சிறந்த டெஸ்ட் லெவனை ஹர்பஜன்சிங் தேர்வு செய்திருக்கிறார்.

அதில் துவக்க வீரர்களாக இங்கிலாந்து அணியை சேர்ந்த அலஸ்டேர் குக் மற்றும் இந்தியாவின் வீரேந்திர சேவாக் இருவரும் இடம் பிடித்திருக்கின்றனர். விரேந்திர சேவாக்கை நவீன கிரிக்கெட் உலகின் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.

மூன்றாவது இடத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாராவை தேர்வு செய்திருக்கிறார். நான்காவது இடத்தில் கிரிக்கெட்டின் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் இடம் பெற்றிருக்கிறார். ஐந்தாவது இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் வாஹ் இடம் பெற்றிருக்கிறார். இந்த சிறந்த டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் இவரையே தேர்வு செய்திருக்கிறார். 

ஆறாவது இடத்தில் தலை சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராகத் திகழ்ந்து வந்த தென் ஆப்பிரிக்காவின் ஜாக் காலிஸ் இடம் பெற்றிருக்கிறார். இந்த அணியின் விக்கெட் கீப்பராக குமார் சங்ககரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இந்த சிறந்த டெஸ்ட் அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளரை மட்டுமே ஹர்பஜன்சிங் தேர்வு செய்திருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது. இவர் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சு ஜாம்பவானாக இருந்த ஷேன் வார்னேவை இந்த பட்டியலில் தேர்வு செய்திருக்கிறார். வேகப்பந்துவீச்சை பொருத்தவரை, கிளன் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் பாகிஸ்தான் அணியின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழல் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனை 12 ஆவது வீரராக அணியில் இவர் இணைத்திருக்கிறார். இவரை ஆடும் 11 வீரர்கள் பட்டியலில் சேர்க்காமல் 12 வீரராக சேர்த்திருப்பது கூடுதல் ஆச்சரியத்தை அளிக்கிறது. 

இந்த அணியில் இந்திய டெஸ்ட் அணியை நம்பர்-ஒன் இடத்திற்கு கொண்டு சென்ற மகேந்திர சிங் தோனி மற்றும் சதங்களை குவித்து வரும் விராட் கோலி ஆகிய இருவருக்கும் இவர் இடம் கொடுக்கவில்லை. அதேபோல் இந்திய சுழற்பந்து வீச்சு ஜாம்பவான் அணில் கும்ப்ளேவிற்கும் இந்த பட்டியலில் இடம் இல்லை என்பது சற்று அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

ஹர்பஜன் சிங்கின் சிறந்த டெஸ்ட் லெவன்:

அலஸ்டர் குக், வீரேந்திர சேவாக், பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், ஸ்டீவ் வாஹ் (கேப்டன்), ஜாக் காலிஸ், குமார் சங்கக்கரா(கீப்பர்), ஷேன் வார்னே, வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், ஜேம்ஸ் ஆண்டர்சன், முத்தையா முரளிதரன் (12வது வீரர்).