ஆர்சிபி-க்கு அடுத்த கேப்டனை முடிவு பண்ணிட்டோம்.. இவர்தான் அது; உண்மையை உடைத்த டேனியல் வெட்டோரி!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு அடுத்த சீசனில் இவர்தான் கேப்டனாக இருப்பார் என்று பேட்டியளித்துள்ளார் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி.

ஐபிஎல் தொடரின் 15வது சீசனுக்கு முன்பாக மிகப் பெரிய ஏலம் நடத்தப்பட இருக்கிறது. இந்த ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்பு, ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் அதிகபட்சம் தங்களது அணியில் இருந்து 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். இந்த நிகழ்வு ஏற்கனவே நடந்து முடிந்துவிட்டது. 

டிசம்பர் 1 முதல் 25ஆம் தேதிக்குள் புதிதாக சேர்ந்திருக்கும் இரண்டு அணிகள் தலா நான்கு வீரர்களை எடுத்துக்கொள்ளலாம். அதன்பிறகு மிகப் பெரிய ஏலம் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விராட் கோலியை 15 கோடிக்கும், மேக்ஸ்வெல் 11 கோடிக்கும், சிராஜ் 7 கோடிக்கும் தக்கவைத்துள்ளது.

கடந்த சீசனுக்கு பிறகு, விராட் கோலி, “தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன்” என்று தெரிவித்திருக்கிறார். ஆகையால் புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்? அல்லது ஏலத்தில் அனுபவம் மிக்க வீரரை எடுத்து கேப்டனாக நியமிப்பார்களா? என சந்தேகங்கள் நிலவி வந்தது.

பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் டானியல் வெட்டோரி, அடுத்த கேப்டன் யார்? என்பது குறித்து தனது பேட்டியில் தெரிவித்திருக்கிறார். “விராட் கோலி பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய சொத்தாகும். அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகியது அதிர்ச்சியளிக்கிறது.

இருப்பினும் புதிதாக கேப்டனை தேடும் தலைவலி எங்களுக்கு இல்லை. அனுபவமிக்க மேக்ஸ்வெல் இருக்கிறார். அவரை கேப்டனாக நியமிக்க உள்ளோம். இதற்கு முன்னர் மற்ற நாடுகளின் லீக் போட்டிகளில் அவர் கேப்டனாக அனுபவம் பெற்றிருக்கிறார்.

மேலும் கடந்த சீசனில் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். ஏலத்தில் இன்னும் சில அனுபவமிக்க வீரர்கள் எடுக்கப்பட்டாலும், மேக்ஸ்வெல் கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்படமாட்டாது.” என்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக் ஹசன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. வருகிற ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் பதவியேற்க இருக்கிறார். அடுத்து இரண்டு வருடத்திற்கு சஞ்சய் பாங்கர் இந்த பொறுப்பில் இருப்பார் என்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தெரிவித்திருக்கிறது