“விராட்கோலி எங்களை இப்படியொரு நிலைமைக்கு தள்ளிடுவாரு..” – கோஹ்லியின் கேப்டன்ஷிப் குறித்து ரோகித் சொன்ன சீக்ரெட்ஸ்!!

விராட் கோலியின் கேப்டன் பொறுப்பில் இந்திய அணி இப்படித்தான் இருந்தது என்று மனம் திறந்து பேட்டியளித்துள்ளார் புதிய கேப்டன் ரோஹித் சர்மா.

சர்வதேச டி20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி விலகிய பிறகு அந்த பொறுப்பு ரோஹித் சர்மாவிடம் கொடுக்கப்பட்டது. விராட் கோலி ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதற்கு மனம் இல்லை என்பதால், ராஜினாமா செய்யாமல் இருந்தார்.

இருப்பினும் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இரண்டு கேப்டன்கள் இருந்தால் குழப்பம் நேரிடும் என்பதால், பிசிசிஐ ஒரு மனதாக முடிவு செய்து, டி20 மற்றும் ஒருநாள் போட்டிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க முடிவு செய்திருந்தது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு மாற்றப்பட்டதன் காரணமாக பிசிசிஐ மீது விராட்கோலி அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு ரோகித் சர்மா பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது கோலியின் கேப்டன் பொறுப்பில் இந்திய அணி எத்தகைய மனநிலையில் இருந்தது. கோலி எப்படி அணியை கையாள்வார் என்று மனம் திறந்து பேசினார். “விராட் கோலி, மைதானத்திற்குள் வந்தால், நமக்கு பின்னடைவே இருக்கக் கூடாது என்கிற மனநிலையில் வீரர்கள் அனைவரையும் வைத்திருப்பார்.

போட்டியின் கடைசிப்பந்து வரை உறுதியுடனும் போராட்டத்துடனும் எடுத்து செல்வார். 5 ஆண்டுகளுக்கும் மேலாக கேப்டன் பொறுப்பில் இருந்து பல வெற்றிகளைப் பெற்றுத் தந்திருக்கிறார். அவருடன் சேர்ந்து விளையாடுவதில் எண்ணற்ற அனுபவங்கள் எனக்கு கிடைத்திருக்கிறது.

போட்டியின்போது ஒரே வார்த்தை மட்டுமே சொல்லுவார். இன்றைய போட்டி நம்முடையது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பார். இன்னும் சில ஆண்டுகள் இருவரும் ஒன்றாக பயணித்து அணியின் வெற்றியை உறுதி செய்வோம்.” என்றார்.

அடுத்தடுத்து வரவிருக்கும் ஐசிசி தொடர்கள் குறித்து ரோகித்சர்மா கூறியதில், நிச்சயமாக ஐசிசி தொடருக்காக நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்திய அணி ஐசிசி தொடர்களில் மிகப்பெரிய அளவில் தவறுகளை செய்யவில்லை. ஆனாலும் வெற்றி கிடைக்கவில்லை என்பதால் இன்னும் கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது. அணியின் மேலாளர்கள் உடன் இதற்கான ஆலோசனைகளும் திட்டமிடல்களும் நடைபெற்று வருகிறது.” என்றார்