“அவர் பேட்டிங் செய்வதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது”- கேப்டன் தோனி பேட்டி!

0

16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மார்ச் 31) மாலை 07.00 மணிக்கு பிரம்மாண்டமாக கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, தமன்னா ஆகியோரின் நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தனர். அதைத் தொடர்ந்து, வாணவேடிக்கை, இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றிருந்தனர்.

கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு தான் ஐ.பி.எல். தொடக்க விழா, கோலாகலமாக நடைபெற்றதை அடுத்து, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்கள், ஐ.பி.எல். நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, நடைபெற்ற முதல் லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பவுலிங்கைத் தேர்வு செய்தது குஜராத் அணி. இதையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதன் காரணமாக, 20 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்களை எடுத்துள்ளது.

அதிகபட்சமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்களையும், மொயின் அலி 23 ரன்களையும், பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களையும், அம்பதி ராயுடு 12 ரன்களையும், சிவம் துபே 19 ரன்களையும், தோனி 14 ரன்களையும் எடுத்துள்ளனர்.

அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணி தரப்பில் முகமது ஷமி, ராஷித் கான், ஜோசப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், லிட்டில் 1 விக்கெட்டையும் எடுத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக, சுப்மன் கில் 63 ரன்களையும், விருத்திமான் சாஹா 25 ரன்களையும், சாய் சுதர்சன் 22 ரன்களையும், விஜய் சங்கர் 27 ரன்களையும், ராகுல் திவாதியா 15 ரன்களையும், ரஷீத் கான் 10 ரன்களையும் எடுத்துள்ளனர்.

சென்னை அணி தரப்பில், துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட்டையும், ராஜ்வர்தன் ஹாங்கார்கேகார் மூன்று விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தோல்விக்கு பிறகு பேட்டியளித்த கேப்டன் தோனி, “ருத்துராஜ் மிக நேர்த்தியாக விளையாடினார்; வருகிற பந்தைக் கவனித்து, மிகச் சிறப்பாக அடிக்கிறார்; அவர் பேட்டிங் செய்வதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. இளம் வீரர்கள் தாமாக முன்வந்து சிறப்பாக விளையாட வேண்டியது, அணியின் வெற்றிக்கு மிகவும் அவசியம். நாங்கள் அனைவரும் இன்னும் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ‘இம்பாக்ட் பிளேயர்’ ஆக களமிறக்கப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே, போட்டியில் அதிகபட்ச ரன்களை விட்டுக்கொடுத்த வீரரானார்.

இன்று (ஏப்ரல் 1) மாலை 03.30 மணிக்கு பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றனர். அதேபோல், இரவு 07.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here