வின்டேஜ் ஆஸ்திரேலியா இஸ் பேக்… முதல் முறையாக டி20 உலகக்கோப்பையை தட்டித்தூக்கிய ஆஸ்திரேலியா!! 

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளும் பலப்பரிட்சை மேற்கொண்டன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

நியூசிலாந்து அணிக்கு துவக்க வீரர்களாக கப்டில் மற்றும் மிட்சல் இருவரும் களம் கண்டனர். அரையிறுதி போட்டியில் அபாரமாக விளையாடிய மிட்சல் இப்போட்டியில் துவக்கம் முதலே தடுமாற்றத்துடன் பந்தை எதிர்கொண்டார். அவர் 11 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில், கப்டில் 28 ரன்களுக்கு ஆட்டம் இழக்க, நல்ல துவக்கம் கிடைக்காமல் நியூசிலாந்து அணி திணறியது. மற்றொரு முனையில் தனது நங்கூர ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தி வந்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். 

பிலிப்ஸ் (18), ஷைபிரட்(8) இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். கேப்டன் வில்லியம்சன் 48 பந்துகளில் 85 ரன்கள் விளாசி அணியை நல்ல ஸ்கோர் எட்ட உதவினார். நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்தது.

மைதானம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததால், இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணி துவக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ஆரோன் பின்ச் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்து, மீண்டும் ஒருமுறை நல்ல துவக்கம் அமைத்துதர தவறினார். ஆனால் மற்றொரு துவக்க வீரர் வார்னர் வழக்கம்போல அதிரடியாக விளையாட துவங்கி ரன் குவிப்பில் ஈடுபட்டார். இவருக்கு பக்கபலமாக ஆடிய மிச்செல் மார்ஷ் தனது பங்கிற்கு அதிரடியை வெளிப்படுத்த, இவர்களைத் தடுக்க முடியாமல் நியூசிலாந்து பந்து வீச்சாளர்கள் திணறினர். 

வார்னர் 38 பந்துகளுக்கு 53 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்தது. வர்னர் ஆட்டமிழந்த பிறகும் மிச்செல் மார்ஷ் நிறுத்தாமல் அதே அதிரடியை தொடர்ந்தார். பெரிதும் நம்பப்பட்ட போல்ட், 4 ஓவர்களில் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதே நியூசிலாந்து அணிக்கு கிடைத்த ஒரே ஆறுதல். இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மார்ஷ் 77 ரன்களும், மேக்ஸ்வெல் 28 ரன்களும் அடித்திருந்தனர். 

ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து, முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது.