ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள்.. வரலாறு படைத்து ஜாம்பவான்கள் பட்டியலில் இடம்பிடித்த அஜாஸ் பட்டேல்!! டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் முழு பட்டியல்..

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கியது. சிறப்பான துவக்கம் அமைத்துக் கொடுத்த மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்தது. கில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புஜாரா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். 80 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாற்றம் கண்டது.

முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்கள் இம்முறை ஆட்டமிழந்தார். முதல் நாள் முடிவில் இந்திய அணி 221 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் 120 ரன்களுடனும், விருத்திமான் சஹா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4 விக்கெட்டுகளையும் நியூசிலாந்து அணியின் சுழல்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றி இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு சஹா மற்றும் அஸ்வின் இருவரும் அடுத்தடுத்து அஜாஸ் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து ஆடிய மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்திருந்தபோது இதே அஜாஸ் பந்தில் வெளியேறினார். இவருக்கு பக்கபலமாக இருந்த அக்சர் பட்டேல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். இவரும் 52 ரன்களுக்கு அஜாஸ் பந்தில் ஆட்டமிழக்க, 316 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 

பின்னர் வந்த ஜெயந்த் யாதவ் மற்றும் சிராஜ் இருவரும் அஜாஸ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்திய அணி முதல் இன்னிங்சில் பத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் அடித்திருந்தது. 

இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் அரங்கில் வரலாற்றுச் சாதனை படைத்தார். ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். 

டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியல்:

ஜிம் லெக்கர்(இங்கிலாந்து) – ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக – 1956 – 53/10

அனில் கும்ப்ளே(இந்தியா) – பாகிஸ்தான் அணிக்கு எதிராக – 1999 – 74/10 

அஜாஸ் பட்டேல்(நியூசிலாந்து) – இந்திய அணிக்கு எதிராக – 2021 – 119/10