16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், நாளை (மார்ச் 31) மாலை குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.


இந்த தொடக்க விழாவில், திரைப் பிரபலங்களில் கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற உள்ளன. கடந்த 2019- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தாண்டு தான் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழா நடைபெறவிருப்பதால், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள 10 அணிகளின் கேப்டன்கள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த நிலையில், அனைத்து அணிகளின் வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். நாளை இரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நடப்பு சாம்பியனான ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


குஜராத் அணியுடனான போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சென்னை அணி, சொந்த மாநிலத்தில் அந்த அணிக்கு தக்க பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், இரு அணிகளிலும் முன்னணி கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில், போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று கூறப்படுகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பலமுறை கேப்டன்களை மாற்றியும், கோப்பையை வெல்லாத அணியைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
கடந்த 2008- ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இதுவரை 15 ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்கள் நடந்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து முறையும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்கு முறையும் கோப்பையை வென்றுள்ளனர்.


அதேபோல், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் ஐ.பி.எல். கோப்பையை வென்றுள்ளனர்.
இந்த நிலையில், அதிகமுறை கேப்டன்களை மாற்றிய அணி என்ற சாதனையைப் படைத்துள்ளது பஞ்சாப் கிங்ஸ் அணி. இதுவரை 15 சீசன்களில் பஞ்சாப் கிங்ஸ் அணி சுமார் 13 முறை கேப்டன்களை மாற்றியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த வீரர்கள் யுவராஜ் சிங், சேவாக், முரளி விஜய், ரவிச்சந்திரன் அஸ்வின், கே.எல்.ராகுல், அகர்வால் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன்களாக செயல்பட்டுள்ளனர்.


அதேபோல், இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த குமார் சங்ககரா, ஜெயவர்தனே ஆகிய வீரர்களும், ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த கில்கிறிஸ்ட், டேவிட் ஹசி, பெய்லி, மேக்ஸ்வெல், ஆகிய வீரர்களும், தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியைச் சேர்ந்த டேவிட் மில்லர் ஆகியோர் பஞ்சாப் கிங்ஸ் அணியை கேப்டன் பொறுப்பில் வழிநடத்தியுள்ளனர்.
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.