மிகப்பெரிய வீரரை குறிவைக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.. லீக்கான தகவல்கள்!! இவர் முன்னாள் ஆர்சிபி வீரராம்!!

தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெய்னை எடுப்பதற்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முனைப்பு காட்டுகிறது. இவருக்கு புதிய பொறுப்பு கொடுக்கப்பட இருக்கிறதாம்.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின்போது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் நிறைய சிக்கல்கள் நிலவி வந்தன. குறிப்பாக கேப்டனாக இருந்து வந்த வார்னர், ஒரு சில போட்டிகளில் கேப்டன் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளியில் அமர்த்தப்பட்டார். இந்த விவகாரம் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளாகியது. குறிப்பாக டி20 உலக கோப்பை தொடரின் போது, அவர் சிறப்பாக விளையாடி தொடர் நாயகன் விருதை பெற்ற போது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீதும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 

மேலும் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேன் வில்லியம்சன் உட்பட 3 வீரர்களை தக்க வைத்துள்ளது. வார்னர் மற்றும் ரஷீத் கான் இருவரையும் சமாதானம் செய்து ஏன் தக்க வைக்க வில்லை என விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை என்பதால் பயிற்சியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனடிப்படையில் கடந்த இரண்டு வருடங்களாக ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக இருந்த டிரெவர் பேலிஸ் மற்றும் பிராட் ஹேடின் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதற்கு முன்னதாக ஹைதராபாத் அணியின் பயிற்சியாளராக இருந்த டாம் மூடி, மீண்டும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தலைமையிலான சன்ரைசர்ஸ் அணி 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய பந்துவீச்சு பயிற்சியாளரை நியமிக்க ஆலோசனைகள் நடைபெற்று வந்தன. இதில், டேல் ஸ்டைன் புதிய பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் என்று செய்திகள் அடிபடுகின்றன. அவரிடம் ஹைதராபாத் அணி நிர்வாகம் பேச்சுவார்த்தைகள் நடத்தியதாகவும் அதன் முடிவில் ஸ்டெயின் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. இன்னும் ஓரிரு தினங்களில் இதற்கான அறிவிக்கை வெளியிடப்படலாம் என்றும் தெரிகிறது.