2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேனா?? என்பது குறித்து தெரிவித்துள்ளார் மகேந்திர சிங் தோனி.
2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில், வரலாறு காணாத வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் பல விமர்சனங்களும், தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக வேண்டும் என்கிற கருத்துக்களும் நிலவிவந்தன. இதனை தலைகீழாக மாற்றும் விதமாக, நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் நான்காவது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றதற்காக, அதன் வீரர்களுக்கு சென்னையில் பாராட்டு விழா நடத்த அணி நிர்வாகத்தினர் முடிவு செய்திருந்தனர். ஐபிஎல் போட்டிகளின் போது, டி20 உலகக் கோப்பைக்கு செல்லும் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அணியின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். இதனால் தனிமைப்படுத்துதல் காரணமாக வீரர்கள் துபாயில் தங்கிவிட்டனர். இவர்களுக்கு சென்னையில் நடக்கவிருந்த பாராட்டு விழா தள்ளிச் சென்றுகொண்டே இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் வீரர்களுக்கான பாராட்டு விழா வருகிற நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறும் என அணி நிர்வாகத்தினால் வெளியிடப்பட்டிருந்தது. அந்த விழாவானது தற்போது சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற தோனி, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் முக்கியமான ஒன்றாக, அடுத்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது குறித்து பகிர்ந்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில், அடுத்த வருடம் ஐபிஎல் தொடருக்கு இன்னும் நீண்டகாலம் இருக்கின்றன. இது குறித்து நன்கு யோசித்து முடிவு எடுப்பேன். 2008ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் அணிக்கு வீரர்கள் எடுக்கப்பட்டபோது, அடுத்த பத்து வருடங்களுக்கான அணி ஏறக்குறைய இதுதான் என முடிவெடுத்து பயணித்தோம்.
முக்கியமான வீரர்கள் மாறாமல் கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் சென்னை அணியில் இடம்பெற்றிருந்தனர். அதேபோல இந்த வருடம் நடக்கும் ஏலத்திலும் அடுத்த 10 ஆண்டுகளுக்கான அணியை உருவாக்க வேண்டும். சென்னை அணியின் எதிர்காலம் மிகவும் முக்கியம். நான் விளையாடுவது என்பது இரண்டாவது பட்சமே என்றார்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி அளித்த பேட்டியின் போது, “இந்த வருடம் தோனியை நிச்சயம் தக்க வைப்போம்.” என தெள்ளத்தெளிவாக அவர் கூறியதும் குறிப்பிடத்தக்கது.