இரண்டாவது டி20 போட்டி இதன் காரணமாக ரத்தாகிறதா?? – ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கால் வந்துள்ள புதிய சிக்கல்!!!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையேயான 2வது டி20 போட்டி ராஞ்சி மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்த போட்டியை ஒத்திவைக்கக்கோரி வழக்கறிஞர் ஒருவரால் பொதுநல வழக்கு போடப்பட்டிருப்பது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி முதல் கட்டமாக 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்தியாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளது. ஆகையால் ஜெய்ப்பூர் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் 100% ரசிகர்களுக்கு அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் தற்போது 2வது டி20 போட்டி ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி மைதானத்தில் நடைபெறவிருக்கிறது இதிலும் ரசிகர்களுக்கு 100% அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. 

ரசிகர்களுக்கு 100% அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் குமார் பொதுநலன் வழக்கு தொடுத்திருக்கிறார். அவர் அளித்த மனுவில், ஜார்கண்ட் மாநிலத்தில் தற்போது வரை கோவில்கள் உயர் நீதிமன்றங்கள் மற்றும் இன்னபிற மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் 50 சதவீதம் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் விளையாடும் போட்டிகளுக்கு 100% அனுமதி அளிக்கப்பட்டிருப்பது கொரோனா பரவலுக்கு  கூடுதல் வாய்ப்பாக அமையும்.

முன்னதாக, 50 சதவீதம்மட்டுமே ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த முடிவானது திரும்பப் பெறப்பட்டு 100% அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதையும் அவரது மனுவில் குறிப்பிட்டு பொதுநலன் வழக்கு தொடுத்திருக்கிறார். குமார் தொடுத்த இந்த பொதுநலன் வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பது குறித்த போதுமான தகவல்கள் தற்போது வரை தெரியவில்லை. 

இதற்கிடையில் இன்று இரவு இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறும் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டன. எனவே போட்டியை ரத்து செய்வதற்கான எவ்வித முகாந்திரமும் இல்லை என தெரிகிறது.

ஆனால், குமார் தனது மனுவில், போட்டியை ரத்து செய்யாமல் வேறொரு நாளுக்கு தள்ளிவைத்துவிட்டு மீண்டும் புதிதாக விற்பனையை துவங்க வேண்டும். அதில் 50 சதவீத ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதியும் கொடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.