எதுவும் சொல்லாமல்.. இஷ்டத்துக்கு முடிவெடுக்கிறாரா விராட் கோலி?? – பிசிசிஐ அதிகாரி காட்டம்!! தென்னாப்பிரிக்கா தொடரில் திடீர் மாற்றம்

தென்னாப்பிரிக்கா அணியுடனான ஒருநாள் தொடரில் விராத் கோலி, சொந்த காரணங்களுக்காக விலகுகிறார் என்று எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை என பிசிசிஐ அதிகாரி ஒருவர் பேட்டி அளித்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உள்ளது. வருகிற டிசம்பர் 26ம் தேதி நடைபெறும் தொடருக்கு இந்திய அணி வீரர்கள் தற்போது இருந்தே பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சில நாட்கள் இந்திய மைதானங்களில் பயிற்சிக்கு பிறகு தென்னாபிரிக்கா சென்று தனிமைப்படுத்துதலில் ஈடுபட உள்ளனர்.  

தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கபட்டிருந்தார். திடீரென ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்த தொடரில் இருந்து விலகி இருக்கிறார். அவருக்கு பதிலாக மற்றொரு துவக்க வீரர் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்திய வீரர்களுடன் வருகிற புதன்கிழமை இணைந்து விராட்கோலி பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறார். டிசம்பர் 17 ஆம் தேதி இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்கா செல்ல உள்ளனர்.

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்பட உள்ளது. ஒருநாள் போட்டி தொடரில் விராட் கோலி சொந்த காரணங்களுக்காக இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. அவரது மகள் வாமிகாவின் முதல் பிறந்தநாள் சரியாக ஒருநாள் தொடர் நடக்கும்போது வருவதால், விராட் கோலியால் பங்கேற்க முடியவில்லை. மகளின் முதல் பிறந்தநாள் என்பதற்காக கட்டாயம் அவருடன் நேரத்தை செலவழிக்க இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். மேலும் பிறந்தநாளை கொண்டாட சுற்றுலா செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.  

சொந்த காரணங்களுக்காக தொடரில் இருந்து வெளியேறுவது குறித்து விராட்கோலி எதுவும் சொல்லவில்லை என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் காட்டமாக பேட்டியளித்துள்ளார். பிசிசிஐ அதிகாரி அளித்த பேட்டியில்,

“விராட்கோலி இதுவரை அதிகாரப்பூர்வமாக எங்களிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஒருவேளை அவர் இத்தகைய முடிவினை எடுத்திருந்தால், இது குறித்து பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு விடுப்பு கொடுப்பது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும். தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய்ஷா இருவருக்கும் எந்தவித தகவலும் தற்போது வரை வரவில்லை.

ஜனவரி 19, 21, 23 ஆகிய நாட்களில் ஒருநாள் போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. விராட் கோலி தனது குடும்பத்தினருடன் தங்கவுள்ளார். நிச்சயம் வெளியே செல்ல விரும்பினால், அதைப்பற்றி முடிவு செய்ய வேண்டியது தலைமை தேர்வுக்குழு அதிகாரி மற்றும் செயலாளர் ஆவர். ஆகையால் அவர்களின் முடிவே இறுதியானது.” என்றார்.