இவரது சாதனையை விராட்கோலி நினைத்தால் கூட முறியடிக்க முடியாது – அதிரடியாக கருத்து தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி!

கிரிக்கெட் வரலாற்றில் ஜாம்பவான் என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சுமார் 15,921 ரன்களையும், 463 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18,426 ரன்களையும், ஒரு டி20 போட்டியில் விளையாடி 10 ரன்களையும் எடுத்துள்ளார்.

Ravi sastri

அதேபோல், 78 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 2,334 ரன்களையும் குவித்துள்ளார். குறிப்பாக, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 49 சதங்கள், டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்கள் என மொத்தம் 100 சதங்களை அடித்துள்ள ஒரே வீரர் என்ற பெருமையை சச்சின் பெற்றுள்ளார்.

இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரராக திகழும் விராட் கோலி, நடந்து முடிந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி, தனது 75வது சதத்தைப் பதிவுச் செய்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் சுமார் மூன்றரை ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்துள்ளார் என்பது நினைவுக்கூறத்தக்கது.


கிரிக்கெட் வீரர் விராட் கோலி, 108 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 28 சதங்களுடன் 8,416 ரன்களைக் குவித்துள்ளார். அதேபோல், 274 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 சதங்களுடன் 12,898 ரன்களைக் குவித்துள்ளார். சர்வதேச 115 டி20 போட்டிகளில் விளையாடி 1 சதங்களுடன் 4,008 ரன்களை எடுத்துள்ளார். 223 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடியுள்ள 5 சதங்களுடன் 6,624 ரன்களைக் குவித்துள்ளார்.

சர்வதேச போட்டிகளில் 75 சதங்களை அடித்துள்ள விராட் கோலி, விரைவில் சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை முறியடிப்பார் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷோயப் அக்தர் கருத்து தெரிவித்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் பயிற்சியாளருமான ரவி சாஸ்திரி, “சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை முறியடிப்பது விராட் கோலிக்கு எளிதானது அல்ல. என்னைப் பொறுத்தவரை விராட் கோலி இன்னும் ஐந்து ஆண்டுகள் வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியும். அத்தகைய போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினாலும், 100 சதங்களை அடிப்பது கடினம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, சச்சினின் சாதனையை முறியடிப்பாரா விராட் கோலி என்ற விவாதங்கள் சமூக வலைதளங்களில் நடைபெற்று வருகின்றன.