“பர்ஸ்ட் தோனி.. அப்புறம் இவர்” .. ஏலத்தில் தக்கவைக்கப்படும் இரண்டாவது சிஎஸ்கே வீரர்!!! – காசி விஸ்வநாதன் கொடுத்த ஹிண்ட்!!

ஐபிஎல் ஏலத்தில் இரண்டாவது வீரராக இவரை தக்க வைக்க உள்ளோம் என ஹின்ட் கொடுத்திருக்கிறார் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2008ஆம் ஆண்டு முதல் கேப்டனாக இருந்து வரும் மகேந்திர சிங் தோனி தலைமையில் நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது. ஆகையால் அவர் சென்னை ரசிகர்களின் சொத்தாகவே மாறியிருக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும் அவரை மாற்ற அணிக்கு விட்டுக்கொடுக்க சென்னை ரசிகர்கள் விரும்பமாட்டார்கள். 

நடந்து முடிந்த 13-வது சீசனில், முதல் முறையாக சென்னை அணி பிளே-ஆப் சுற்றுக்கு செல்லாமல் வெளியேறியது. அதன்பின்னர் 14வது சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நான்காவது முறையாக கோப்பையையும் கைப்பற்றியது.

மகேந்திர சிங் தோனிக்கு தற்போது 40 வயது எட்டி உள்ளது. ஆகையால் அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் விளையாடுவாரா? என்ற கேள்விகள் எழுந்திருக்கின்றன. மேலும் அடுத்த ஐபிஎல் சீசனுக்கு முன்னதாக ஏலம் நடக்கவிருக்கிறது. ஒவ்வொரு அணியும் நான்கு வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும்.

எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ஏலத்தில் வீரர்களை எடுப்பார்களா? அல்லது இன்னும் சில சீசன்களில் தோனி தேவை என்று தக்க வைப்பார்களா? என்கிற சந்தேகங்களும் எழுந்துள்ளது. சமீபத்தில் சென்னையில் நடந்த பாராட்டு விழாவில், “சென்னை மைதானத்தில் தான் எனது கடைசி ஐபிஎல் போட்டி இருக்கும். அதற்கு இன்னும் எத்தனை சீசன்கள் ஆனாலும் சரி” என்று பேட்டி அளித்திருந்தார். 

அதேபோல் வீரர்களை தக்க வைப்பது குறித்து பேசியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன். அவர் கூறுகையில், “தோனியை விட்டுக்கொடுக்கும் எண்ணத்தில் நாங்கள் இல்லை. முதல் வீரராக அவரை தக்க வைக்க உள்ளோம்.” என தெரிவித்தார்.

இதனால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். மேலும் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், நல்ல பார்மில் இருக்கிறார். ஆகையால் தொடர்ந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்.” என்றார். 

அப்போது அவரிடம், இந்த வருடம் பிராவோ தக்க வைக்கப்படுவாரா? என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த காசி விசுவநாதன், “அதைப்பற்றி எங்களால் எதுவும் கூற இயலாது. ஆனால் சென்னை அணிக்கு அவர் இன்னும் சரியான வீரராகவே இருக்கிறார்.” என சூசகமாக பதிலளித்தார்.

இதனை வைத்துப் பார்க்கையில், ஐபிஎல் ஏலத்தில் இரண்டு வெளிநாட்டு வீரர்கள், 2 இந்திய வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள், ஒரு வெளிநாட்டு வீரர்கள் என்கிற கணக்கில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். தக்க வைக்கப்படும் ஒரு வெளிநாட்டு வீரராக பிராவோ இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.