“விராட் கோலி ஆடியது போதும்.. இனி அந்த இடத்தை இவருக்கு கொடுங்க” : கம்பீர் பேசிய பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!!

விராட் கோலியின் இடத்தை இனி இவரிடம் கொடுத்து விடுங்கள் என கௌதம் கம்பீர் அளித்த பேட்டி தற்போது சர்ச்சையாகி உள்ளது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் எடுத்திருந்தது. இதனை சேஸ் செய்த இந்திய அணி, 19.4 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது.

இப்போட்டியில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதேபோல் 3-வது இடத்தில் களம் இறங்கிய சூர்யகுமார் யாதவ், 40 பந்துகளில் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். 

இருப்பினும், துரதிஷ்டவசமாக அவரால் கடைசி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடிக்க இயலாமல் போனது. ஆனாலும், முக்கியமான கட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக இவருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் சூர்யகுமார் யாதவ் மற்றும் விராட் கோலி இருவரையும் குறிப்பிட்டு தனது கருத்தினை தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், “லிமிடெட் ஓவர் போட்டிகளில் இந்திய அணியின் மூன்றாவது இடத்திற்கு சூர்யகுமார் யாதவ் சரியாக இருப்பார்.

அவரிடம் வித்தியாசமான ஷாட்டுகள் நிறைய இருக்கின்றன. மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் எளிதாக அடிக்க முயற்சிக்கிறார். அதனை சரியாகவும் செய்கிறார். இவருக்கு சுழல் பந்துவீச்சாளர்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்கள் என இருவரும் பந்துவீச திணறுகிறார்கள். எனவே இவரை அந்த இடத்தில் களம் இறங்கச் செய்வதே இந்திய அணிக்கு சிறப்பான ஒன்றாக அமையும். விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பினாலும், அவரை நான்காவது இடத்தில் களம் இறக்கிவிட்டு சூர்யகுமார் யாதவ் அவருக்கு மூன்றாவது இடத்தை தொடர்ந்து வழங்க வேண்டும். 

வழக்கம்போல ரோஹித் மற்றும் கே எல் ராகுல் இருவரும் டி20 போட்டிகளில் துவக்க வீரராக களமிறங்குவது சரியானதாக இருக்கும்.” என்று தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

கம்பீரின் இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் சர்ச்சையாகி வருகிறது. ஏனெனில் விராட் கோலி பல ஆண்டுகளாக 3-வது இடத்தில் களம் இறங்கி பல இமாலய சாதனைகளை படைத்திருக்கிறார். சமீபத்தில் அணியில் இடம்பெற்ற சூர்யகுமார் யாதவிற்கு அதனை மாற்றச் சொல்லுவது எந்த அளவிற்கு சரியாக இருக்கும் என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.