ஹர்ஷல் பட்டேல் பற்றி கருத்து தெரிவித்த கம்பீர்!!! யாருங்க இவரு.. புகழ்ந்து பேசுறாரா.. இல்ல நக்கல் பண்றாரா?? என்ன கூறினார்.. இதோ

ஆட்டநாயகன் விருது பெற்ற ஹர்ஷல் பட்டேல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர்.

ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்து அணிக்கு களமிறங்கிய துவக்க வீரர்களான மார்ட்டின் கப்தில் மற்றும் டெரில் மிட்சேல் இருவரும் இந்திய அணிக்கு சவாலாக திகழ்ந்தனர். கப்தில் துவக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் இவர்களை நிறுத்த முடியாமல் இந்திய பந்துவீச்சாளர்கள் போராடினார். 

4.2 ஓவர்களில் நியூசிலாந்து அணி 48 ரன்கள் எடுத்திருந்த போது, கப்தில் (31) ஆட்டமிழந்தார். 6 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்திருந்தது. மிகச்சிறந்த தொடக்கத்திற்கு பிறகு, நியூசிலாந்து அணி நிச்சயம் 180 ரன்களுக்கும் அதிகமாக அடிப்பதற்கு வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிடில் ஓவர்களில் சிறப்பாக கட்டுப்படுத்தி ரன் குவிப்பை தடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணியை 153 ரன்கள் மட்டுமே எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

இரண்டாவது டி20 போட்டியில் அறிமுகமான ஹர்ஷல் பட்டேல், ஐந்தாவது வீரராக பந்துவீசினார். அவர் வந்த பிறகு நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் குவிக்க முடியாமல் திணறினர். 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணிக்கு பக்கபலமாக இருந்தார். 

அடுத்ததாக பேட்டிங் செய்த இந்திய அணி 17.2 ஓவர்களில் 155 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசி முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்தியது மட்டுமல்லாமல், ரன்களையும் கட்டுப்படுத்திய ஹர்ஷல் பட்டேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். 

ஹர்ஷல் பட்டேல் குறித்து தனது கருத்தை தெரிவித்த கௌதம் கம்பீர் பேசுகையில், இன்றைய போட்டியில் ஹர்ஷல் ஆடிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. இது அவருக்கு முதல் போட்டியைப் போலவே இல்லை. கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், அதன்பிறகு ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடிய அனுபவம் முழுமையாக வெளிப்பட்டிருக்கிறது. சர்வதேச போட்டிகளில் அவர் சிறப்பாக ஆடியதை பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதே அனுபவத்தை அவர் தொடர்ந்து வெளிப்படுத்தி இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக வர வேண்டும். 

மேலும் பேசிய அவர், இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். 1 அல்லது 2 போட்டிகளில் தவறிழைத்துவிட்டால் வெளியில் அமர்த்துவதை தவிர்த்து தொடர்ந்து வாய்ப்புகள் கொடுப்பதன் மூலம் வீரர்களின் மனநிலை மற்றும் செயல்பாடு இரண்டையும் முழுமையாக பெற முடியும். இந்தியா போன்ற திறமையான வீரர்கள் நிறைந்த நாட்டில் ஒருமுறை வாய்ப்பை தவறவிட்டால் மீண்டும் அணியில் இடம் பெறுவது கடினம் என ஹர்ஷல் பட்டேல் நன்கு உணர வேண்டும் என்றும் தெரிவித்தார்.