யாரு நான் ஏமாற்றுகிறேனா?? வாய்க்கு வந்ததை சொல்லாதீங்க; நொந்துபோன ஹார்திக் பாண்டியா!! விஷயம் இவ்வளவு சீரியஸா??

மும்பை விமான நிலையத்தில் ஹார்திக் பாண்டியாவிடம் கைப்பற்றப்பட்ட உயர்ரக கைக்கடிகாரங்களின் மதிப்பு உண்மையில் இவ்வளவுதான் என பதிலளித்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. அதன்பிறகு வீரர்கள் சில நாட்கள் துபாயில் தங்கி சுற்றுலா மேற்கொண்டனர். அவர்களுடன் ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது குடும்பத்தினரும் சுற்றுலா சென்றிருந்தனர். பின்னர் அவரது மனைவி மற்றும் குழந்தை உட்பட 3 பேரும் கடந்த நவம்பர் 14ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினர். 

அப்போது சுங்கத்துறை அதிகாரிகள் ஹார்திக் பாண்டியா மற்றும் குடும்பத்தாரிடமும் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் உயர்ரக வாட்சுகள் இரண்டு கைப்பற்றப்பட்டது. இரண்டின் விலையும் சுமார் 5 கோடிக்கும் அதிகமாக இருக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல்கள் தொடர்ந்து பரவிவந்தன. இந்த சம்பவம் பரபரப்பாக அடுத்த இரண்டு நாட்களுக்கு பேசப்பட்டது. அதுவரை தொடர்ந்து மவுனம் காத்துவந்த ஹர்திக் பாண்டியா, தற்போது உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்கமாக தெரிவித்திருக்கிறார்.

அவர் கூறுகையில், “சுங்கவரி துறையினர் என்னிடம் பரிசோதனை மேற்கொண்டு இரண்டு வாட்சுகள் எடுத்து உண்மைதான். ஒரு வாட்ச் சார்ந்த ஆவணங்கள் என்னிடம் இருந்தன. மற்றொன்றை நான் தவறவிட்டுவிட்டேன். ஆகையால் அதற்கான சுங்க கட்டணம் என்ன என்பதை மதிப்பிட்டு வருகின்றனர்.

முழுமையாக கணக்கிடப்பட்ட உடன் அதனை செலுத்திவிட்டு எனது கடிகாரத்தை நான் திரும்பப் பெற்றுக் கொள்கிறேன். அதன் உண்மையான மதிப்பு 5 கோடி என சமூக வலைதளங்களில் பரவியது மிகவும் தவறான தகவல். அதேபோல் இரண்டில் ஒன்று மட்டுமே என்னிடமிருந்து கைப்பற்றப்பட்டது. 

இதற்கிடையில் நான் ஐந்து கோடிக்கும் அதிகமாக ஏமாற்றி விட்டேன். கடத்தலில் ஈடுபடுகிறேன் என எண்ணற்ற தவறான தகவல்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. உண்மையில் நடந்தது என்ன என்பது தெரியாமல், பலரும் வாய்க்கு வந்ததை சமூக வலைதளங்களில் பரப்பி வருவதால் மன உளைச்சல் மட்டுமே அதிகமாகிறது. எனவே போதுமானவரை தவறான தகவல்களை பரப்புவதை நிறுத்திக்கொள்ளுங்கள். உண்மையில் என்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட வாட்ச் மதிப்பு கிட்டத்தட்ட 1.5 கோடி மட்டுமே.” என மனம் நொந்தபடி தெரிவித்திருக்கிறார்.