“இனிமே இந்த பையன் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்.. அது தோனி இல்லை”; ஜோஸ் பட்லர் ஒப்பன் டாக்!!

வரும் ஆஷஸ் தொடரில் ரிஷப் பண்ட்டை போன்று எவ்வித பயமும் இல்லாமல் அதிரடியாக விளையாடப் போகிறேன் என மனம் திறந்து பேசியுள்ளார் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர்.

கிரிக்கெட் வட்டாரத்தில் மிகப்பெரிய தொடராக அனைவராலும் பார்க்கப்படும் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் தொடர் இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி பிரிஸ்பேன் மைதானத்தில் வருகிற டிசம்பர் 8ஆம் தேதி துவங்குகிறது. டி20 உலகக் கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு இரு அணி வீரர்களும் அதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். 

ஆஷஸ் தொடர் என்றாலே இரு அணிகளுக்கும் இடையே அனல்பறக்கும் என்பதால் ஒவ்வொரு வீரர்களும் தங்களது முழு செயல்பாட்டை வெளிப்படுத்துவர். இந்த வருட ஆஷஸ் தொடரில் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராக இருப்பவர் இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர். அவர் பலமுறை, “தனக்கு பிடித்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனி; அவரை கண்டு நான் வியந்திருக்கிறேன். எனக்கு இன்ஸ்பிரேஷன்.” என குறிப்பிட்டு பேசியிருக்கிறார். ஆனால் இம்முறை அனைவரையும் ஆச்சரியமூட்டும் விதமாக ஆஸ்திரேலிய மண்ணில் ரிஷப் பண்ட் போன்று எவ்வித பயமும் இல்லாமல் விளையாடப் போகிறேன் என தெரிவித்திருக்கிறார். அவர் கூறுகையில், 

“ஆஸ்திரேலிய மண்ணில் பண்ட் கடந்தமுறை விளையாடிய விதம் பார்ப்பதற்கே சிறப்பாக இருந்தது. எவ்வித பயமும் இல்லாமல், எதிரணி யார் என்பதை சற்றும் யோசிக்காமல் வழக்கமான பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்னைப்போன்ற விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென்கள் ரிஷப் பண்ட் போன்றே விளையாட ஆசைப்படுவார். அவரது மனநிலை மற்றும் ஆடும்விதம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதிலிருந்து எடுத்துக் கொள்வதற்கும் நிறைய இருக்கிறது. நிதானமாகவும் ஆடுகிறார்; பல நேரங்களில் அதிரடியை வெளிப்படுத்துகிறார். இம்முறை ஆஷஸ் தொடரில் அவரைப் போன்று பயமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்த உள்ளேன்.” என குறிப்பிட்டு பேசினார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இரு அணிகள் மோதிய டெஸ்ட் தொடரின்போது, ரிஷப் பண்ட் 274 ரன்கள் அடித்திருந்தார்.  அதில் இவரது சராசரி 68.5 ஆகும். இந்த தொடரில் இந்திய அணி 2 – 1 என  டெஸ்ட் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஆஷஸ் தொடருக்காக இங்கிலாந்து வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா சென்றடைந்துவிட்டனர். இரண்டு வாரங்கள் கட்டாய தனிமைப்படுத்துதலில் வீரர்கள் ஈடுபடவேண்டும். அதன் பிறகு பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவிருக்கிறது. இவை முடிந்த பிறகு 5 டெஸ்ட் போட்டிகள்  தொடரானது டிசம்பர் 8ஆம் தேதி துவங்குகிறது.