ஐபிஎல்: லக்னோ அணிக்கு இவர்தான் புதிய கோச்.. எல்லாம் பேசி முடிச்சிடங்களாம்!! கேப்டனும் முடிவாகிடுச்சாம்.. ஏலத்திற்கு முன்பே செம்ம டீல்!!!

புதிதாக இணைந்துள்ள லக்னோ அணிக்கு ஆன்டி பிளவர் பயிற்சியாளராக வருவது கிட்டத்தட்ட நூறு சதவீதம் உறுதி ஆகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வருகிற ஐபிஎல் 2022 தொடரில் ஏற்கனவே இருக்கும் 8 அணிகளுடன் கூடுதலாக 2 அணிகள் இணைந்து, மொத்தம் 10 அணிகள் விளையாட இருக்கின்றன. புதிதாக இணைக்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் அகமதாபாத் இரு அணிகளும் ஐபிஎல் தொடருக்கு முன்பாக பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் நியமிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே இருக்கும் 8 அணிகள் அதிகபட்சம் தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதேபோல் ஏற்கனவே இருக்கும் அணிகள் தக்க வைத்த பிறகு, மிகப் பெரிய ஏலம் நடத்தப்படுவதற்கு முன்பாக புதிதாக இணைக்கப்பட்ட இரு அணிகளுக்கும் முன்னுரிமை கொடுக்கும் விதமாக தலா 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ள வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்கான கடைசி நாள் டிசம்பர் 25 ஆகும். 

லக்னோஅணி கேஎல் ராகுல் மற்றும் ரஷீத் காண இருவரையும் தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு தனது அணிக்கு வருமாறு வற்புறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் கேஎல் ராகுலை கேப்டனாக நியமிக்கவும் திட்டங்கள் வகுத்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன. விதிமுறைப்படி இந்த செயல் தவறாகும். விரைவில் இதற்கான விசாரணைகள் நடத்தப்படும் என்று பிசிசிஐ தெரிவித்திருக்கிறது. 

சமீபத்திய தகவலின்படி, லக்னோ அணிக்கு புதிய பயிற்சியாளரை நியமிக்க அதன் நிர்வாகம் ஆர்வம் காட்டி வருகிறது. தலைமைப் பயிற்சியாளர் பட்டியலில் முதல் இடத்தில் தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு துணை பயிற்சியாளராக இருந்து வரும் ஜிம்பாப்வே அணியை சேர்ந்த ஆன்டி பிளவர் இருக்கிறார்.

அந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெக்ரா மற்றும் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் டேனியல் வெட்டோரி ஆகியோரும் இருக்கிறார்களாம். ஆண்டி பிளவரை நியமிக்க லக்னோ அணி நிர்வாகம் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. இவருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. 

ஆண்டி பிளவர் தற்போது கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் லூசியா அணிக்கு பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் 2010 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டி பிளவர் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட, ஆஷிஷ் நேஹ்ரா பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்படலாம் எனவும் தகவல்கள் வருகின்றன.