“என்ன நடக்குதுன்னு சொல்லவே முடியல.. கேப் விடாம அடிச்சாங்க”.. நாங்க எங்க தோத்தோம் தெரியுமா?? – சான்ட்னர் ஓபன் டாக்!!

இந்த தொடரை இழந்ததற்கு முக்கிய காரணம் இதுதான் என இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டனாக இருந்த மிச்சல் சான்டனர் பேட்டியளித்துள்ளார்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில், டிம் சவுதி ஓய்வு காரணமாக விளையாடவில்லை. ஆகையால், மிட்செல் சான்டனர் கேப்டன் பொறுப்பை ஏற்று விளையாடினார். 

இந்திய அணியின் துவக்க வீரர்கள் பவர்பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடி 69 ரன்கள் சேர்த்தனர். பின்னர் 7வது ஓவர் வீசவந்த சான்டனர், அதே ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார். தனது 2 வது ஓவரில் மேலும் ஒரு விக்கெட் எடுத்தார். 4 ஓவரில் அவர் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை கைப்பற்றி, ரன் குவிக்கும் வேகத்தையும் கட்டுப்படுத்தினார்.

தனிப்பட்ட முறையில் சிறப்பாக விளையாடினாலும், மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்த தவறிவிட்டனர். இதனால் இந்திய அணி 184/7 அடித்தது. பின்னர் இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி 111 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை பெற்றது. 0-3 என தொடரையும் இழந்தது.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த சான்டனர் கூறியதாவது:

மைதானத்தின் பனிப்பொழிவை சற்றும் கணிக்க முடியவில்லை. கடந்த இரண்டு போட்டிகளிலும் பனிப்பொழிவு ஆட்டத்தின் போக்கை மாற்றுவதற்கு முக்கிய இருந்தது. இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் ஒட்டுமொத்தமாக எங்களை அடக்கிவிட்டனர். குறிப்பாக அக்சர் பட்டேல் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

தொடரை கைப்பற்றியதற்காக மொத்த பாராட்டுகளும் இந்திய அணியைச் சேரும்.பிஅனைத்து விதத்திலும் எங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்காமல் சிறப்பாக விளையாடினர். சென்ற ஆட்டத்தை பொறுத்தவரை, கேஎல் ராகுல் மற்றும் ரோஹித் இருவரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஆட்டம் நமது கையில் இருக்கும் என எதிர்பார்ப்பது கடினம்தான். 

அதேபோல் இன்றைய  போட்டியில் பேட்டிங் மற்றும் பௌலிங் இரண்டிலும் எங்களுக்கு அழுத்தம் கொடுத்துவிட்டனர். இந்த தருணத்தில் அனுபவமிக்க கேன் வில்லியம்சனை நாங்கள் தவறவிடுகிறோம். அடுத்த உலகக் கோப்பைக்கு இன்னும் 11 மாதங்களே இருக்கின்றன அதனால் அதை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.

எங்களுக்கு இந்த தொடர் முழுவதும் அபாரமான துவக்கம் அமைத்துக் கொடுத்தார் கப்டில். அடுத்ததாக, இளம் வீரர்கள் இந்த தொடர் மூலம் பல அனுபவத்தை பெற்றிருப்பர் என எண்ணுகிறேன். மீண்டும் ஒருமுறை தொடரை கைப்பற்றிய இந்திய அணிக்கு எனது பாராட்டுக்கள். இந்த தொடரில் இருந்து நேர்மறையான சிந்தனைகளை மட்டுமே எடுத்துச் செல்ல உள்ளோம்.” என்றார்.