“இனி வரும் எந்த ஆட்டத்திலும் நான் ஆடமாட்டேன்”….ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் உருக்கம்

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட் லீக்கின் 40-வது லீக் ஆட்டம் துபாயில் நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

அதன்படி, முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 57 பந்தில் 82 குவித்து ஆட்டமிழந்தார். ஜெய்ஸ்வால் 23 பந்தில் 36 ரன்கள் எடுத்து அவுட்டானார். லோம்ரோர் 29 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

அதனைத்தொடர்ந்து 165 ரன்கள் இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக ஜேசன் ராய் மற்றும் சஹா களமிறங்கினர்.

11 பந்துகளை சந்தித்த சஹா 18 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அதன்பின்னர் கேப்டன் கேன் வில்லியம்சன்னுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ராய் ராஜஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தார். அதிரடியாக ஆடிய ஜேசன் ராய் 42 பந்துகளில் 8 பவுண்டர்கள், 1 சிக்சர் உள்பட 60 ரன்கள் குவித்து அவுட் ஆனார். அடுத்துவந்த ரியான் பராக் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார். ஆனால், மறுமுறையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வில்லயம்சன் அரைசதம் கடந்தார்.

இறுதியில் 18.3 ஓவரில் 3 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் 167 ரன்களை எடுத்தது. இதனால், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றிபெற்றது.

மேலும் இந்த ஆட்டத்தில் வார்னருக்கு பதிலாக களமிறங்கிய ராய் தனயது கலக்கலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வார்னரின் இடத்தைப் பிடித்துவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் ஆண்டின் முதல்பாதியில் மோசமான ‘பார்ம்’ காரணமாக கேப்டன் பதவியை இழந்த ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர் 8 ஆட்டங்களில் ஆடி 195 ரன்களே எடுத்துள்ளார். இதனால் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வார்னர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

ஸ்டேடியத்துக்கு வராமல் ஓட்டல் அறையில் இருந்தபடி ஆட்டத்தை பார்த்த அவர் வெற்றிக்கு பிறகு இன்ஸ்டாகிராம் மூலம் அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் ரசிகரின் கேள்விக்கு அளித்த பதிலில் ‘துரதிர்ஷ்டவசமாக மீண்டும் (இந்த சீசனில்) நான் விளையாடமாட்டேன். ஆனால் தயவு செய்து தொடர்ந்து அணிக்கு ஆதரவு அளியுங்கள்’ என்று கேட்டுக் கொண்டார். இதன் மூலம் அடுத்து வரும் லீக் ஆட்டங்களில் 34 வயதான டேவிட் வார்னர் விளையாடமாட்டார் என்பது உறுதியாகி இருக்கிறது. வருங்காலத்தில் ஐதராபாத் அணியில் அவர் தொடருவாரா? என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது.