2025 சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்குமா?? மீண்டும் வழுக்கும் இந்தியா-பாகிஸ்தான் அரசியல் போர்??!!! மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பதில்!! எத்தனை காலம் தான் இப்படியே பண்ணுவீங்க??

2025 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்குமா? என்பது குறித்து மத்திய உள்துறை முடிவு எடுக்கும் என விளையாட்டுத் துறை இணைஅமைச்சர் பதில் அளித்துள்ளார்.

2021ஆம் ஆண்டுக்கான டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. கொரோனா கட்டுப்பாடு காரணங்களால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி முடிக்கப்பட்டது. இதனையடுத்து அடுத்த 10 ஆண்டுகளுக்கு, அதாவது 2031-ம் ஆண்டு வரை டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய தொடர்கள் எந்தெந்த நாடுகளில் நடைபெறுகின்றன என்பதற்கான முழு பட்டியலை சமீபத்தில் ஐசிசி வெளியிட்டது. 

இதில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் அணி 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்துகிறது. ஏற்கனவே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறுவதில்லை. ஐசிசி தொடர்களில் நடைபெறும் போட்டிகளில் மட்டுமே இவ்விரு அணிகளும் அட்டவணைக்கு ஏற்றவாறு மோதுகின்றன. 

தற்போது, 2021 டி20 உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருந்தது. இதில் பாகிஸ்தான் அணி பங்கேற்குமா என சந்தேகம் எழுந்தது. இறுதிக்கட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டதால் பாகிஸ்தான் அணி பங்கேற்றது. தற்போது 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் நடைபெறும் என அட்டவணைகள் வெளியிடப்பட்டுவிட்டன. இதில் இந்திய அணி பங்குபெறுமா? இல்லையா? என தொடர்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன. 

இதற்கு பதிலளித்த மத்திய இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், 

“சமீபத்தில் நியூசிலாந்து இங்கிலாந்து ஆகிய அணிகள் பாகிஸ்தான் சென்று கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மறுப்பு தெரிவித்து போட்டிகள் ரத்தானது. பாதுகாப்பு காரணங்களால் இந்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அதேபோல் இந்திய அணிக்கும் பாதுகாப்பு தேவை. இந்தியா பங்கேற்பது குறித்து தற்போது முடிவு எடுக்க எதுவுமில்லை. 2025ஆம் ஆண்டு இது குறித்த முடிவுகள் எடுக்கப்படும். மத்திய உள்துறை அமைச்சகம் எடுக்கும் முடிவே இறுதியானது. இதில் விளையாட்டுத்துறை ஆலோசனைக் கூறலாமே தவிர, முடிவுகள் எடுக்க முடியாது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.” என்று தெள்ளத்தெளிவாக தெரிவித்துள்ளார்.