இந்தியா ‘வின்’ பண்ணிட்டாங்க.. ஆனாலும் விராட்கோலி இதை நினைத்து வருத்தப்படுவாரு; கோஹ்லி பற்றி முன்னாள் பேட்டிங் கோச் கூறிய உண்மை!!

0

போட்டியை வென்றிருந்தாலும், விராட் கோலி நிச்சயம் இந்த செயலுக்காக வருத்தப்பட்டுக் கொண்டிருப்பார் என இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் பேட்டியளித்தார்.

தென்ஆப்பிரிக்கா அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் டெஸ்ட் தொடரிலும் முன்னிலை பெற்று இருக்கிறது. வெற்றியை இந்திய அணி கொண்டாடி வந்தாலும், விராத் கோலியின் பேட்டிங் மிகவும் வருத்தத்திற்குரிய வகையில் இருக்கிறது. 

இரண்டு இன்னிங்சிலும் ஒரே மாதிரியான  பந்திற்கு விராட் கோலி ஆட்டமிழந்தார். இத்தனைக்கும் அந்தப் பந்துகள் விக்கெட் எடுக்கும் அளவிற்கு கடினமானது இல்லை. இதனால் ஜாம்பவான்கள், முன்னாள் வீரர்கள் என பலரும், இந்த தவறு குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். 

போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிடி பந்துவீசினார். உடலை விட்டு 7வது ஸ்டம்பில் சென்ற பந்தை அடிக்க முயற்சித்து ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது இன்னிங்சில் அதேபோன்ற ஒரு பந்தை யான்சன் வீசினார். மீண்டும் ஒருமுறை அதை அடிக்க முயற்சித்து டி காக்-இடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

விராட் கோலி போன்ற அனுபவம் மிக்க முன்னணி வீரர்கள், இப்படி ஒரே போட்டியில் இருமுறை ஒரே மாதிரியான தவறை செய்து ஆட்டம் இழந்தால், இந்திய அணி பின்னடைவை சந்திக்க நேரிடலாம். மேலும், இதுபோன்ற தவறினால் கோஹ்லி ஆட்டமிழப்பது முதல்முறை அல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட்கோலியின் இத்தகைய தவறான ஆட்டம் குறித்து இந்திய அணியின் பேட்டிங் கோச் சஞ்சய் பாங்கர் தனது பேட்டியில் கருத்துக்களை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “வெளியே சென்ற பந்தை அடிக்க முயற்சித்ததற்காக விராட்கோலி தனது அறையில் வருத்தப்பட்டிருப்பார். லஞ்ச் முடிந்த பிறகு, வந்த முதல் பந்தில் அவுட் ஆனார். இதற்கு சரியான கவனத்தை செலுத்தவில்லை. அலட்சியமாக ஆடினார் என்றே நான் கருதுகிறேன். அதைத் தவிர, கோஹ்லியின் ஆட்டத்தில் ஆழமாக கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை.

விராட் கோலிக்கு வீசப்பட்ட பந்து நான்காவது அல்லது ஐந்தாவது ஸ்டம்பில் சென்றால், அவர் விளையாடியதை நியாயப்படுத்தலாம். ஏழாவது அல்லது எட்டாவது ஸ்டம்ப்பில் சென்றுகொண்டிருந்தது. அடிக்கடி இப்படி அடிக்க நினைத்து அவுட்டாகி இருக்கிறார். கவர் திசையில் விராட்கோலி மிகச் சிறப்பாக விளையாடுவார். அதனாலேயே, ஷாட்டை அடிக்க முயற்சித்திருப்பார் என நான் நினைக்கிறேன். சீக்கிரம் இந்த தவறை சரி செய்வதற்கு ஒரு வழியை அவர் கண்டுபிடிக்க வேண்டும்.” என கருத்தினை பதிவு செய்திருந்தார்.

கிட்டத்தட்ட 60 இன்னிங்ஸ் களாக விராட் கோலி சதம் அடிக்க முடியாமல் திணறி வருகிறார் பலமுறை அரைசதம் அடித்தும் அதனை சதமாக மாற்ற இயலாமல் தவித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here