“மும்பையில் பிறந்த நான்.. இதே மைதானத்தில்..” 10 விக்கெட் எடுத்த பிறகு அஜாஸ் பட்டேல் சொன்னது இதுதான்!!

ஒரே இன்னிங்சில் 10 விக்கெட் வீழ்த்திய பிறகு அஜாஸ் பட்டேல் உருக்கமாக பேட்டியளித்துள்ளார்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நியூசிலாந்து அணி டி20, டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. தொடரின் 2வது டெஸ்ட் போட்டி வான்கடே மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் எடுத்தது. கில் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த புஜாரா மற்றும் விராட் கோலி இருவரும் ஒரே ஓவரில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர். முதல் போட்டியில் அபாரமாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் 18 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். முதல்நாள் முடிவில் இந்திய அணி 221 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 4 விக்கெட்டுகளையும் அஜாஸ் பட்டேல் கைப்பற்றி இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு சஹா மற்றும் அஸ்வின் இருவரும் அடுத்தடுத்து அஜாஸ் பட்டேல் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினர். மறுமுனையில் நிலைத்து ஆடிய மயங்க் அகர்வால் 150 ரன்கள் எடுத்திருந்தபோது இதே அஜாஸ் பந்தில் வெளியேறினார். இவருக்கு பக்கபலமாக இருந்த அக்சர் பட்டேல் 52 ரன்களுக்கு அஜாஸ் பந்தில் ஆட்டமிழக்க, 316 ரன்களுக்கு இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்திருந்தது. 

பின்னர் வந்த ஜெயந்த் யாதவ் மற்றும் சிராஜ் இருவரும் மீண்டும் அஜாஸ் பந்தில் ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 10 விக்கெட்டுகள் இழப்பிற்கு 325 ரன்கள் அடித்திருந்தது. 

இந்திய அணியின் 10 விக்கெட்டுகளையும் சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் பட்டேல் கைப்பற்றி சர்வதேச டெஸ்ட் அரங்கில் வரலாற்றுச் சாதனை படைத்தார். ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார். 

இத்தகைய மகத்தான சாதனைக்கு பிறகு பேட்டியளித்த அஜாஸ் பட்டேல் கூறுகையில், “என் வாழ்நாளில் மிகவும் மகிழ்ச்சியான தருணமாக உணர்கிறேன். எனது தாய், தந்தை மற்றும் மனைவி ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சக அணி வீரர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய மகத்தான சாதனையை படைப்பேன் என்று என் வாழ்நாளில் நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இதனை சாதகம் ஆக்கிய கடவுளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

கடவுளின் கருணையால் தான் மும்பை மைதானத்தில் இதை என்னால் சாதிக்க முடிந்திருக்கிறது. மும்பையில் பிறந்து, மீண்டும் மும்பைக்கு வந்து, இந்திய அணிக்கு எதிராக இத்தகைய சாதனை படைத்திருப்பது அளவற்ற மகிழ்ச்சி. இந்திய அணியின் ஜாம்பவான் கும்பலே இடம் பெற்றிருக்கும் சாதனைப் பட்டியலில் நானும் இடம் பிடித்திருக்கிறேன் என்பதை என் வாழ்நாள் சாதனையாக பார்க்கிறேன்.

முதல் போட்டியில் கிடைத்த நல்ல மனநிலையுடன், இரண்டாவது போட்டியில் எனக்கு சரியாக வரும் இடத்தில் தொடர்ந்து பந்துவீசி வந்தேன். அதற்கு கிடைத்த ஒரு பரிசாக தான் இந்த 10 விக்கெட்டுகளை பார்க்கிறேன்.” என்று மகிழ்ச்சியின் உச்சத்தில் பேட்டியளித்தார்.