டி20 உலக கோப்பை தொடர் அரையிறுதி சுற்றை எட்டியிருக்கிறது. அரையிறுதி சுற்றில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய 4 அணிகள் முன்னேறி இருக்கின்றன. இந்திய அணி லீக் சுற்றில் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றதால் புள்ளிகளின் அடிப்படையில் தொடரில் இருந்து வெளியேறியது.
நமீபியா மற்றும் இந்தியா இரு அணிகளும் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை இழந்து விட்டதால், சம்பிரதாய அடிப்படையில் நடைபெற்ற கடைசி போட்டியில் மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.
தொடர்ந்து களமிறங்கிய நமீபிய அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இந்தியாவின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் மட்டுமே நமீபிய அணி எடுத்திருந்தது.
எளிய இலக்கை துரத்திய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் இருவரும் அதிரடியை வெளிப்படுத்தினர். ரோகித் சர்மா 37 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இடைவிடாமல் அதிரடியை தொடர்ந்தார். கே எல் ராகுல் 36 பந்துகளுக்கு 54 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல், இந்திய அணியை வெற்றிக்கு எடுத்துச்சென்றனர்.
இந்திய அணி 15.2 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஒரு விக்கெட் மட்டுமே இழந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இந்தப் போட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நெருக்கமான போட்டியாக இருந்தது. காரணம், இந்த போட்டிக்கு பிறகு விராட் கோலி டி20 போட்டிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகுகிறார். ஆகையால் இப்படி ஒரு நெகிழ்ச்சியான தருணத்தில் போட்டிக்குப் பிறகு பேட்டியளித்த விராட் கோலி கூறுகையில்,
“தற்பொழுது மிகவும் நிம்மதியாக உணர்கிறேன். கடந்த ஆறு ஏழு வருடங்களாக அதிகபட்ச வேலைப்பளு எனக்கு இருந்து வந்திருக்கிறது. அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உதவியுடன் இதனை என்னால் சரிவர செய்ய முடிந்தது. இந்த காலகட்டத்தில் பல ஏற்ற இறக்கங்களை இந்திய அணி சந்தித்திருக்கிறது அதனுடன் நானும் தலைமைப் பொறுப்பேற்று பயணித்து இருப்பது என் வாழ்நாளில் மறக்க முடியாத அங்கமாக இருக்கும். இந்த தருணத்தில் அணையில் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன்.
அதேநேரம் வேலைப் பளுவை குறைத்துக் கொண்டு மற்ற விஷயங்களில் கவனம் செலுத்த இதுவே சரியான நேரமும் கூட. டி20 போட்டிகளில் அடுத்த கேப்டனாக வரவிருக்கும் வீரருக்கு என்னுடைய பங்களிப்பையும் அனுபவத்தையே நிச்சயம் பகிர்ந்து கொள்வேன் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் என்னுடைய செயல்பாடுகள் இன்னும் உத்வேகத்துடன் தொடரும்.” என மகிழ்ச்சியாக பேட்டியளித்தார்.
அதேநேரம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கும் இது கடைசி போட்டியாகும். அவரது பதவிக்காலம் இத்துடன் முடிவடைகிறது. அடுத்த இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டிருக்கிறார். டி20 உலக கோப்பை தொடருக்குப் பிறகு அவர் பொறுப்பு ஏற்க உள்ளார்.