நீண்ட நாட்கள் செஞ்சுரி அடிக்கவில்லை என்றால் இந்திய அணியில் தொடர்ந்து இடம்பெறுவது கடினம் என்று புஜாராவை விமர்சித்துள்ளார் விவிஎஸ் லக்ஷ்மன்.
இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்து வருபவர் புஜாரா. நங்கூரம் போல நிலைத்து நின்று விளையாடுவதற்கு பெயர்போன இவர், சமீபகாலமாக மிகவும் திணறி வருகிறார். இவர் கடந்த 42 இன்னிங்ஸ்களாக செஞ்சுரி அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது 193 ரன்கள் அடித்தார். அதன்பிறகு தற்போது வரை ஒரு சில போட்டிகளில் அரைசதம் விளாசி உள்ளார். ஆனால் அதனை சதமாக அவரால் மாற்ற முடியவில்லை.
புஜாராவின் இடத்தை நிரப்ப இந்திய அணியில் பல வீரர்கள் இருக்கும் நிலையில், இப்படி சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அவரது எதிர்காலத்திற்கு நல்லது அல்ல. கேஎல் ராகுல், ரஹானே போன்ற வீரர்கள் அணியில் இருக்கின்றனர். தற்போது ஸ்ரேயாஸ் அய்யர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். ரோகித் சர்மா அணிக்கு விரைவில் திரும்புவார். அவர் வந்தாலும் இவரது இடம் பாதிக்கப்படும்.
இந்நிலையில் நீண்ட நாட்களாக செஞ்சுரி அடிக்காதது குறித்து விவிஎஸ் லக்ஷ்மன் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
“நீங்கள் இந்திய அணிக்கு அனுபவம் மிக்க வீரராக இருக்கிறீர்கள். உங்களின் இடம் உறுதி என்று நீங்கள் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இறங்கி வரும்போது, செஞ்சுரி அடிப்பதற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும். ஆறாவது அல்லது ஏழாவது இடத்தில் இறங்கினால், இதுபோன்று நாற்பது ஐம்பது ரன்களுக்கு ஆட்டம் இழக்கையில், பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.
அதேநேரம் அணிக்கு அத்தகைய ரன்கள் உதவிகரமாக இருக்கும். ஆனால் முன்னணி இடத்தில் நீங்கள் இறங்கும் பொழுது குறைந்தபட்சம் 5 அல்லது 10 இன்னிங்ஸ்களில் ஒருமுறை சதம் அடித்து நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டும். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டில் உங்களது இடத்தை நிரப்ப ஏராளமான வீரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சுழல்பந்து வீச்சில் மூன்று முறை சுழற்பந்து வீச்சில் அவுட். அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின்போது, சுழற்பந்து வீச்சில் இரண்டு அல்லது மூன்று முறை அவுட். இப்படி கடினமாக இருந்தால், உங்களது குறைபாட்டை கவனித்து விரைவில் சரி செய்துகொண்டு அணிக்கு பங்களிப்பை கொடுக்க வேண்டும். இல்லையேல், விரைவில் உங்களது இடம் காலி.” என்று அறிவுரை கலந்த விமர்சனத்தை முன் வைத்தார்.