தோனி, தினேஷ் கார்த்திக், சஹா.. மூவரில் யார் சிறந்த கேப்டன்?? – பேன்ஸ் மீட்டில் அஸ்வின் கொடுத்த அசத்தல் பதில்!!

தான் விளையாடியதில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என பதிலளித்துள்ளார் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின்.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வரும் ரவிச்சந்திரன் அஸ்வின், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பாக பந்து வீசி புதிய சாதனை படைத்தார். அதாவது டெஸ்ட் அரங்கில் இந்திய அணிக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அஸ்வின் இதுவரை 419 விக்கெடுகளை கைப்பற்றியுள்ளார்.

மேலும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார். இதற்கு முன்னர் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் ஹேட்லி 64 விக்கெட்டுகளை வீழ்த்தியது அதிகபட்சமாக இருந்தது. அதனை முறியடித்து அஸ்வின் 66 விக்கெட்டுகள் கைப்பற்றி முதல் இடத்தில் இருக்கிறார். 

தென் ஆப்பிரிக்கா செல்லும் டெஸ்ட் அணியில் இடம் பெற்றிருக்கும் அஸ்வின், தென் ஆப்பிரிக்கா சென்றடைந்து தற்போது தனிமைப்படுத்துதலில் இருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு தனது யூடியூப் சேனலின் நேரலையில் ரசிகர்களிடம் பேசினார். அப்போது ரசிகர்ஒருவர், “நீங்கள் விளையாடியதில் யார் சிறந்த விக்கெட் கீப்பர்?” என கேள்வி எழுப்பினார். அதற்கு சற்றும் தயங்காமல் பதில் அளித்த ரவிசந்திரன் அஸ்வின், 

“தோனி தான் மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் கடினமான விக்கெட்டுகளைக் கூட எளிதாக எடுத்துவிடுவார். சுழல்பந்து வீச்சாளர்களுக்கு மிகச்சரியான விக்கெட் கீப்பர் தோனி. அவருடன் பல போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். என்னைவிட என்னைப் பற்றி தோனி நன்கு அறிந்து வைத்திருப்பார். தோனி சிறந்தவர் என்று கூறியதற்காக தினேஷ் கார்த்திக், சகா போன்றோர் சரியில்லை என அர்த்தமில்லை. தினேஷ் கார்த்திக் சற்று வித்தியாசமானவர். தமிழக அணியில் அவருடன் பல ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன். தோனி அளவிற்கு மற்ற இருவர்கள் எனக்கு தனிப்பட்ட முறையில் எளிதாக இருந்ததில்லை. இந்த ஒரே காரணத்திற்க்காக தோனியை முதலில் கூறினேன்.” என்று பதிலளித்தார்.

மேலும் பேசிய அவர், “இவர்கள் மூவரையும் பிரித்து பேசுவது அவ்வளவு சரியாக இருக்காது. ஆனால் மூவரில் எனக்கு ஏதுவாக இருப்பவர்கள் என வரிசைபடுத்தினால், தோனி முதலிடத்திலும் தினேஷ் கார்த்திக் இரண்டாவது இடத்திலும் சஹா மூன்றாவது இடத்திலும் இருப்பர்.” என தெளிவுபடுத்தினார்.

அஸ்வின் இந்த மூன்று வீரர்களுடனும் எண்ணற்ற போட்டிகளில் விளையாடி இருக்கிறார். ஆகையால் யார் இவருக்கு சரியாக இருப்பார் என்பதை நன்கு அறிந்து வைத்திருப்பார்.