இந்திய அணி தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணம் இவர்கள் தான்; நான் கிரெடிட் கொடுத்தே ஆகணும் – ரோகித் சர்மா ஓபன் டாக்!!

இந்திய அணியின் வெற்றிக்கு இவர்கள் இவர்கள் முக்கிய பங்காற்றினர் என வெற்றிக்கான காரணத்தை குறிப்பிட்டு பேசியிருக்கிறார் கேப்டன் ரோகித் சர்மா.

3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின. முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று கொல்கத்தா மைதானத்தில் நடைபெற்றது. 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 184 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 56 ரன்கள் அடித்தார். அடுத்ததாக பேட்டிங் செய்த நியூசிலாந்து அணிக்கு துவக்கம் முதலே விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 17.2 ஓவர்களில் 111 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்ததனால், 73 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது நியூஸிலாந்து அணி.

போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்த ரோகித் சர்மா பேசுகையில், “இந்த தொடர் முழுதும் வீரர்கள் சிறப்பாக பங்களிப்பை கொடுத்தனர். ஒவ்வொரு போட்டியிலும் இந்திய அணிக்கு நல்ல துவக்கம் அமைந்தது வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கிறேன். இன்றைய போட்டியில் ராகுல் ஆடவில்லை. ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் நல்ல துவக்கம் அமைத்துக் கொடுத்தார்.

குறிப்பாக ஸ்பின்னர்கள் அஸ்வின் மற்றும் அக்ஷர் பட்டேல் இருவரும் தொடர் முழுவதும் அபாரமாக பந்து வீசினர். இன்றைய போட்டியில் அக்சர் பட்டேல் மிகச் சிறப்பாக செயல்பட்டார். முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுத்துக்கொடுத்தார். சஹல் மீண்டும் அணியில் இணைந்து நன்கு விளையாடியது மகிழ்ச்சி அளிக்கிறது.

வெங்கடேஷ் ஐயர் இன்றைய போட்டியில் பந்துவீச்சில் பங்களிப்பைக்கொடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தியது அவருக்கு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கும். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இன்றைய போட்டியில் விளையாடுவதற்கு சிறிது நேரம் கிடைத்தது. முதல் இரண்டு போட்டிகளில் அவர்கள் இதை தவற விட்டனர். இன்று நல்ல அனுபவம் கிடைத்திருக்கும் என நம்புகிறேன். இந்திய அணியில் கிட்டத்தட்ட 9வது வீரர் வரை நன்கு பேட்டிங் செய்யக்கூடியவர்களாக தெரிகின்றனர். 

ஹர்ஷல் பட்டேல் இதற்கு முன்னர் ஹரியானா அணிக்காக விளையாடுகையில், நான் பார்த்திருக்கிறேன். துவக்க வீரராக களம் இறங்கியிருக்கிறார். அதேபோல் தீபக் சகர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில், சிறப்பாக பேட்டிங் செய்தார். அவரது பேட்டிங் நாளுக்கு நாள் முன்னேறி வருகிறது.

மேலும் சமீபகாலமாக எனது ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பாக இருப்பதில் மகிழ்ச்சி. இதைவிட கேப்டனுக்கு வேறு என்ன விஷயம் சிறப்பனதாக இருந்துவிடப்போகிறது. இந்த தொடரை இழந்திருந்தாலும், நியூசிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக போராடினர். அவர்களுக்கும் போதிய ஓய்வு தேவை என்பதை நாங்கள் நன்கு உணர்வோம்.” என நெகிழ்ச்சியாக பேசினார்.