“நான் இவர தோனி மாதிரின்னு நெனச்சேன்.. ஆனா ஆட்டத்த பார்த்தா அப்படி ஒன்னும் தெரியல” இந்திய வீரரை கடுமையாக விமர்சித்த இன்சாமாம்-உல்-ஹக்!!

இந்த இந்திய வீரரின் ஆட்டம் சற்றும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என கடுமையாக விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக்.

இந்திய அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் தலைமையில் இந்திய அணி அனைத்து ஐசிசி கோப்பைகளையும் வென்று சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு, சில காலம் ஓய்வில் இருந்த அவர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆச்சரியம் அளிக்கும் விதமாக தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 

தோனி அணியில் இருக்கையில், ரிஷப் பண்ட் அவரிடம் பலமுறை ஆலோசனைகளை பெற்று வந்தார். ஆகையால் தோனி ஓய்வு பெற்ற பிறகு, அவரது இடத்திற்கு சரியாக ரிஷப் பண்ட் இருப்பார் என பார்க்கப்பட்டது. இதனை இந்திய ரசிகர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டு வீரர்களும் முன்னாள் வீரர்கள் பலரும் கூறியுள்ளனர்.

தோனி ஓய்வு பெற்ற பிறகு இந்திய அணிக்கு சரியான பினிஷர் கிடைக்காமல் தடுமாறி வருகிறது. அந்த இடத்தை ரிஷப் பண்ட் நிரப்புவார் என எதிர்பார்த்தபோது, பலமுறை சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். குறிப்பாக, லிமிடெட் ஓவர் போட்டிகளில், சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த பண்ட், 17 பந்துகளில் 17 ரன்கள் அடித்திருந்தார். இருப்பினும் இந்திய அணி போராடி வெற்றிபெற்றது.

இந்நிலையில் ரிஷப் பண்ட் ஆட்டம் குறித்து தனது விமர்சனத்தை முன் வைத்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக், 

“நான் ரிசபட்டை தோனி மாதிரியான வீரராக நினைத்தேன். ஆனால் அவர் ஆடும் விதம் எதிர்பார்ப்பிற்கும் குறைவாக இருக்கிறது. குறிப்பாக நியூசிலாந்து அணியுடன் மோதிய ஆட்டத்தில் இக்கட்டான சூழலில் களமிறங்கினார். ஆனால் அவரால் ஆட்டத்தை எடுத்துச் செல்ல முடியவில்லை. மிகவும் தடுமாற்றத்துடன் காணப்பட்டார். 17 பந்துகளில் 17 ரன்கள் அடிப்பது அவரது ஆட்டம் இல்லை.

ஆகையால், அடுத்தடுத்த போட்டிகளில் அவர் இதனை புரிந்துகொண்டு மேம்படுத்த வேண்டும். தோனி மாதிரியான வீரரின் இடத்தை நிரப்புவது அவ்வளவு எளிதல்ல. இதனை மனதில் வைத்து ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆட வேண்டும். இன்னும் ஆட்டத்தின் போக்கை சரியாக புரிந்து கொள்ளாமல் விளையாடுகிறார் என நான் கருதுகிறேன்.” என்று தெரிவித்தார்.