வீடியோ: அவுட்டாகவே கூடாத நேரத்தில்.. ஹிட் அவுட்டான ஜோஸ் பட்லர்!! ஆஷஸ் டெஸ்டில் நடந்த சுவாரஷ்யமான சம்பவம்!!

0

முக்கியமான கட்டத்தில் ஜெய் ரிச்சர்ட்சன் வீசிய பந்தில் ஹிட் அவுட் ஆகி வெளியேறினார் ஜோஸ் பட்லர்.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் வீரர்கள் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை அனாயசமாக விளையாடி அபாரமாக ரன் குவிப்பில் ஈடுபட்டனர். மார்னஸ் லபூச்சானே சதம் விளாசினார். டேவிட் வார்னர், ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி மூவரும் அரைசதம் அடித்தனர். முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட் இழப்புக்கு 473 ரன்கள் எடுத்தது. 

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடர்ந்த இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 236 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ரூட் மற்றும் மலான் இருவரும் அரைசதம் அடித்தனர். 237 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 230/9 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் 467 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இமாலய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி நான்காவது நாள் முடிவில் 82 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களிலேயே இங்கிலாந்து அணி வீரர்கள் மீண்டும் விக்கெட்டுகளை இழக்க துவங்கினர்.

105 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, வோக்ஸ் மற்றும் பட்லர் சிறிது நேரம் களத்தில் நின்றனர். இந்த ஜோடி 7வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தபோது, வோக்ஸ் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ராபின்சன் சொற்ப ரன்களுக்கு வெளியேறினார்.

ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறுவதற்கு இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டபோது, கிட்டத்தட்ட 200 பந்துகளுக்கும் மேல் பிடித்து நங்கூரம் போல் நிலைத்து விளையாடி வந்த ஜோஸ் பட்லர், தாமாகவே முன்வந்து விக்கெட்டை கொடுத்துச் சென்றார். 

ஜெய் ரிச்சர்சன் வீசிய பந்தை சற்று பின்சென்று விளையாட முயற்சித்தார். அப்போது அவரது கால் ஸ்டம்பில் பட்டு பைல்ஸ் கீழே விழுந்தது. இதனால் ஹிட் அவுட் அடிப்படையில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஜோஸ் பட்லர் 206 பந்துகளில் 27 ரன்கள் அடித்திருந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 192 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 275 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. ஆஷஸ் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸி., அணி முன்னிலை வகிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here