16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர், நேற்று (மார்ச் 31) மாலை 06.30 மணிக்கு உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்றழைக்கப்படும், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள், வாணவேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.


தொடக்க விழாவில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ள அணிகளின் கேப்டன்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், ஐ.பி.எல். நிர்வாகிகள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, அதே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு, 178 ரன்களை எடுத்துள்ளார்.


இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 182 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட், 4 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்ஸர்களுடன் 92 ரன்களை எடுத்துள்ளார். அதேபோல், குஜராத் டைட்டன்ஸ் அணியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 63 ரன்களை எடுத்துள்ளார்.
குஜராத் அணி உடனான மூன்று போட்டிகளிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி அடைந்ததால், சென்னை அணியின் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.


இதனிடையே, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நேற்றை லீக் போட்டியில், சிக்ஸரைத் தடுக்க முயன்ற போது, கேன் வில்லியம்சனுக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, மைதானத்தில் இருந்து வெளியேறிய அவர் அங்கு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்த நிலையில், நடப்பு ஐ.பி.எல். தொடர் முழுவதிலும் இருந்து கேன் வில்லியம்சன் விலகுவதாக அறிவித்துள்ளார். நியூசிலாந்து கிரிக்கெட் அணியைச் சேர்ந்த முன்னணி பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன்.
32 வயதான இவர் 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 8,124 ரன்களையும், 161 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6,555 ரன்களையும், 87 டி20 போட்டிகளில் விளையாடி 2,464 ரன்களையும், 77 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 2,101 ரன்களையும் எடுத்துள்ளார்.


ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் 18 அரை சதங்கள், 181 பவுண்டரிகள், 64 சிக்ஸர்களை கேன் வில்லியம்சன் அடித்துள்ளார்.
இந்த நிலையில், கேன் வில்லியம்சனின் விலகல் என்பது குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, பல்வேறு அணிகளிலும் காயம் மற்றும் சொந்த காரணங்களுக்காக ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இருந்து வெளியேறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.