விதிமுறைகளை மீறிய காரணத்திற்காக கே எல் ராகுல் மற்றும் ரஷித் கான் இருவர் மீதும் ஒரு ஆண்டு தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகின்றன.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் துவங்குவதற்கு முன்பாக மெகா ஏலம் வருகிற டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணியின் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதற்கான இறுதிப்பட்டியல் நவம்பர் 30-ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும்.
வீரர்களை தக்கவைக்க ஒவ்வொரு அணியும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. டெல்லி, சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா போன்ற அணிகள் நான்கு வீரர்களை உறுதி செய்துவிட்டன. மற்ற அணிகள் தொடர்ந்து தங்களது வீரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.
இதற்கிடையில் கேஎல் ராகுல் மீது பஞ்சாப் கிங்ஸ் அணியும், ரஷீத் கான் மீது ஹைதராபாத் அணியும் பிசிசிஐ இடம் புகார் அளித்துள்ளது. லக்னோ அணி நிர்வாகம் கேஎல் ராகுல் மற்றும் ரஷீத் கான் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும், தனது அணிக்கு வருமாறு தொடர்ந்து வற்புறுத்தி வருவதாகவும் அளிக்கப்பட்ட புகாரில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
பிசிசிஐ விதிமுறைப்படி ஏலம் நடத்துவதற்கு முன்பாக எந்த ஒரு அணியும் மற்ற அணியின் வீரர்களிடம் பேச்சுவார்த்தை மற்றும் ஒப்பந்தத்தில் ஈடுபடக்கூடாது. 2010ஆம் ஆண்டு ரவீந்திர ஜடேஜா ராஜஸ்தான் அணியில் இருந்த பொழுது மற்ற அணி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய காரணத்திற்காக ஒரு ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட்டார். தற்போது கேஎல் ராகுல் மற்றும் ரஷீத் கான் இருவரும் இதே போன்ற ஒரு புகாரில் சிக்கி உள்ளனர். இவர்கள் இருவரின் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால், இருவரும் ஒரு ஆண்டு தடை செய்யப்படலாம்.
லக்னோ அணி நிர்வாகம் கேல் ராகுலுக்கு 20 கோடி வரையும் ரஷீத் கானுக்கு 16 கோடி வரையும் விலை நிர்ணயம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது கேஎல் ராகுல் பஞ்சாப் அணியில் 11 கோடி பெற்று வருகிறார். ஹைதராபாத் அணியில் ரஷீத் கான் 9 கோடி பெற்று வருகிறார். அவரை தக்கவைக்க அதிகபட்சம் 12 கோடி வரை மட்டுமே ஹைதராபாத் அணி நிர்ணயம் செய்திருப்பதாக தெரிகிறது.