ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் புதிய பயிற்சியாளரை நியமித்துள்ளது. இதன் பிறகாவது கோப்பையை வெல்வார்களா? என ரசிகர்கள் வழக்கமான கிண்டல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் பலம்பொருந்திய அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஒவ்வொருமுறையும் காணப்படுகிறது. இருப்பினும் அந்த அணிக்கு ஐபிஎல் கோப்பை என்பது தற்போது வரை எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. 14 சீசன்களில் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பதே அந்த அணியின் ரசிகர்கள் மத்தியில் நீங்காத சோகமாக இருந்துள்ளது.
கடந்த 13 மற்றும் 14வது சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற பெங்களூரு அணி எலிமினேட்டர் போட்டியில் தோல்வியை தழுவி வெளியேறியதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் 14வது சீசனுக்கு பிறகு தனது கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்வதாக விராட் கோலி தெரிவித்தார். ஆகையால் வரும் ஐபிஎல் தொடரில் அவர் எவ்வித பொறுப்பும் இல்லாமல் சாதாரண வீரராகவே விளையாட உள்ளார். அதேபோல் அணியின் பயிற்சியாளரும் மாற்றப்பட உள்ளதாக அணி நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்று ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் தனது புதிய பயிற்சியாளரை இன்று அறிவித்திருக்கிறது. ஆர்சிபி அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையில் இந்திய அணி பேட்டிங்கில் நன்கு செயல்பட்டதை அனைவரும் கண்டிருப்போம். அதே நிலைமை பெங்களூரு அணியிலும் நீடிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க பெங்களூரு அணிக்கு அடுத்த சீசனில் யார் கேப்டனாக இருப்பார் என பல கேள்விகளும் எழுந்து வருகிறது.
இதற்கு பதிலளித்த அணி நிர்வாகம், தற்போது எதையும் கூற இயலாது கேப்டன் பொறுப்பு ஐபிஎல் ஏலம் முடிந்தபிறகு முடிவெடுக்கப்படும் என்றனர். விராட் கோலி கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டாலும் தொடர்ந்து பெங்களூர் அணிக்காக விளையாடுவேன் என தெரிவித்ததால் ரசிகர்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
எது எப்படி இருந்தாலும், ஆர்சிபி அணியின் கோப்பை கனவு தகர்க்கப்பட்டு அது நனவாகுமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் காண வேண்டும்.
ஐபிஎல் போட்டிகள் இல்லாத சூழலிலும் பெங்களூரு அணி குறித்த கிண்டல்கள் சமூக வலைதளங்களில் நின்றபாடில்லை. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பயிற்சியாளர் குறித்தும் மீம்ஸ்கள் பறக்கவிடப்பட்டு வருகின்றன. இனியாவது கோப்பையை வெல்லுமா? என்பதுதான் அவர்களதும் நமது கேள்வியும் கூட.