எப்போது மீண்டும் துவங்கும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்??? – பிசிசிஐ தலைவர் கங்குலி கொடுத்த சூப்பர் ஹிண்ட்!!

அண்மையில் நடந்த பேட்டி ஒன்றில் இந்தியா – பாகிஸ்தான் தொடர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் கங்குலி. 

கிரிக்கெட் உலகில் பரபரப்பான போட்டியாக கருதப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் கடந்த சில வருடங்களாக அரசியல் காரணங்களுக்காக நடைபெறாமல் போனது. கடைசியாக 2012-13 ஆம் ஆண்டு இவ்விரு அணிகளுக்கும் இடையே கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. 

இருதரப்புகளுக்கான தொடர்கள் மட்டுமே தற்காலிகமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. ஐசிசி நடத்தும் தொடர்களில் இவ்விரு அணிகளும் எவ்வித மறுப்புமின்றி தொடர்ந்து பங்கேற்று வருகின்றன.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது வெளிநாடுகளில் இருக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மிகுந்த கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆகையால் எப்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கிரிக்கெட் தொடர் நடைபெறும் என்று அவ்வபோது கேள்விகளை எழுப்பி வருகின்றனர். 

கடைசியாக இந்தாண்டு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றின்போது இவ்விரு அணிகளும் மோதின. அதில் முதல் முறையாக ஐசிசி நடத்தும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. 

அண்மையில் ஷார்ஜாவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பத்திரிக்கையாளர்களுக்கு பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டியளித்தார். அப்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் எப்போது மீண்டும் துவங்கும் என கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்குலி, “இது இருதரப்பு கிரிக்கெட் வாரியத்தின் கையிலும் இல்லை.” என்றார். 

மேலும் பேசிய அவர், “மிகுந்த வற்புறுத்தலுக்கு பிறகு ஐசிசி நடத்தும் கிரிக்கெட் தொடரில் இவ்விரு அணிகளும் மோதுகின்றன. இரு தரப்புக்கும் இடையிலான தொடர் அரசியல் காரணங்களுக்காக நிறுத்தப்பட்டிருக்கிறது. அரசு எடுக்கும் முடிவிற்கு கிரிக்கெட் வாரியம் நிச்சயம் கட்டுப்பட்டாக வேண்டும். இது என் கையிலோ அல்லது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஷ் ராஜா கையிலோ இல்லை என்பதை அனைவரும் நிச்சயம் புரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் நாங்கள் மீண்டும் இவ்விரு அணிகளும் இயல்பாக கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு வற்புறுத்தி வருகிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” என்றார்.

இது குறித்து மற்றொரு பேட்டியில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஷ் ராஜா கூறுகையில், “அரசு எடுக்கும் முடிவுகளுக்கு நிச்சயம் ஒத்துழைப்பு கொடுத்து வருகிறோம். ஆனால் விளையாட்டுப் போட்டிகளில் அரசியல் தலையீடுகளை தவிர்க்க வேண்டும். வீரர்கள் எவ்வித இடர்பாடும் இன்றி விளையாட்டை விளையாடுவதே சரியானதாக இருக்கும்.” என தனது கருத்தினை தெரிவித்தார் 

இவற்றை வைத்துப் பார்க்கையில், கிரிக்கெட் வாரியங்கள் மீண்டும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை துவங்குவதற்கு தயாராக இருக்கின்றன. அரசியல் தலையீடு உச்சத்தில் இருப்பதால் மட்டுமே இந்த தொடரானது தடை செய்யப்பட்டு இருக்கிறது என தெளிவாக தெரிகிறது.