இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித், 49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3,379 ரன்களையும், 243 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 9,825 ரன்களையும், 148 டி20 போட்டிகளில் விளையாடி 3,853 ரன்களையும், 227 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 5,879 ரன்களையும் குவித்துள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியில் தோனி, சவுரவ் கங்குலி, சச்சின் உள்ளிட்ட அனைத்து வீரர்களின் பாராட்டையும் பெற்றவர் ரோஹித் சர்மா. உலகின் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மா திகழ்கிறார்.
ரோஹித் சர்மா குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பிரக்யான் ஓஜா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில், “15 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய முகாமில் தான் ரோஹித் சர்மாவை நான் முதன் முதலில் சந்தித்தேன்.


அப்போது, ரோஹித் சர்மா சிறந்த விளையாட்டு வீரர் என்று அவரை சக வீரர்கள் பாராட்டினர். அவரது அணிக்கு எதிரான போட்டியில் நான் ரோஹித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினேன்.
அவர் ஆக்ரோஷமாக விளையாடுவார். பொதுவாக, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சரளமாகப் பேசுவார்கள். ஆனால், ரோஹித் சர்மா அப்படி இல்லை அமைதியாக இருந்தார்.


எனது பந்துவீச்சை சிக்ஸர், ஃபோராக ரோஹித் சர்மா விளாசியுள்ளார். பின்னர், நாளடைவில் எனக்கும், ரோஹித்துக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது. ரோஹித் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.
கிரிக்கெட் உபகரணங்கள் அடங்கிய தொகுப்பை வாங்குவதற்கு, குறைவான தொகையே எங்களுக்கு கொடுக்கப்பட்டது. அந்த தொகை போதாது என்பதால், பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து அதில் கிடைத்த வருவாயிலில் அதனை வாங்கியுள்ளார்.
இன்றைக்கு அவரைப் பார்க்கும் போது, மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருக்கிறது. அவர் பல்வேறு சிரமங்களைக் கடந்து, இன்றைக்கு அந்த நிலையை எட்டி இருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.


ரோஹித் சர்மா குறித்து ஓஜா நினைவுக் கூர்ந்ததை அறிந்த அவரது ரசிகர்கள், ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப்பக்கங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
36 வயதான பிரக்யான் ஓஜா, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் ஆவார். இவர் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளையும், 18 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளையும், 6 டி20 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளையும், 92 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 89 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.