“நான் வந்தவுடன் டிராவிட் என்னிடம் முதலில் கேட்டது இதுதான்”; விராட் கோலி கொடுத்த ஹிண்ட்!!

“நான் வந்தவுடன் டிராவிட் என்னிடம் முதலில் இதைப்பற்றி கேட்டார்” என மைதானத்தில் நடந்த சுவாரஸ்யத்தை பகிர்ந்துள்ளார் கேப்டன் விராட் கோலி.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார் கேப்டன் விராட் கோலி. மும்பை மைதானத்தில் மழைப்பொழிவு இருந்து வருவதால், வீரர்கள் தொடர்ச்சியான பயிற்சியில் ஈடுபட முடியாமல் வீரர்கள் தவித்து வருகின்றனர். நியூசிலாந்து வீரர்கள் நேற்றைய தினம் மழை காரணமாக, முழுமையாக பயிற்சியில் ஈடுபடவில்லை. 

இன்னும் குறைந்தபட்சம் 6 நாட்களுக்கு மழைப்பொழிவு இருக்கும் என்று மும்பை வானிலை அறிக்கை தெரிவித்திருக்கிறது. 

நேற்றையதினம் பயிற்சிக்குப் பிறகு வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேட்டியளித்த விராட் கோலி, இந்திய அணியை தேர்வு செய்வது குறித்தும் தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் நடைபெறுமா? என்பது குறித்தும் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார்.

“நான் மீண்டும் அணிக்கு வந்தவுடன் டிராவிட் உடன் சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்போது தனது திட்டங்களை அவர் என்னுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடர் நடைபெறுமா? அதன் நிலை என்ன என்பது குறித்து இருவரும் விவாதித்தோம். பிறகு நேரடியாக அவர் பிசிசிஐ மூத்த அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார். 

எங்களது முழு கவனமும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருக்கிறது. ஆனாலும் வீரர்களுக்கு தென்னாப்பிரிக்க தொடர் நடைபெறுமா? என்பது குறித்து தெளிவு தேவை என்பதால் தொடர்ந்து மூத்த அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். இன்னும் ஓரிரு நாட்களில் இது குறித்து தெளிவு கிடைத்துவிடும் என்று அவர்களும் உறுதி அளித்தார்கள்.” என்றார்.

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீரர்கள் தேர்வு செய்வது குறித்து பேசிய அவர், “இது எங்களுக்கு அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. வீரர்களுக்கு மத்தியில் புரிதல் நீடித்து வருகிறது. அதேநேரம் மைதானத்தில் வானிலைக்கு ஏற்றவாறு வீரர்கள் தேர்வு செய்யவேண்டும் என்பதே தற்போதைய எண்ணம். வானிலை காரணமாக  மைதானம் மாற்றம் அடைந்துள்ளது. முன்புபோல் இல்லை. ஆகையால் தேர்வுசெய்யப்படும் 11 வீரர்களும் அதற்கு ஏற்றார்போல இருப்பர்.” 

“விருத்திமான் சஹா, தனது காயத்தில் இருந்து குணமடைந்து முழு உடல் தகுதியுடன் இருக்கிறார். அவருக்கு நிச்சயம் அணியில் இடம் உண்டு. ரிஷப் இல்லாத நேரத்தில் முதன்மை கீப்பராக எப்போதும் இருப்பார்.” என்று குறிப்பிட்டார்.