“ராகுல் டிராவிட் இதுக்கு எப்படி ஓகே சொன்னாரு.. ஆச்சர்யமா இருக்கே”; இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவி குறித்து ரிக்கி பாண்டிங் ஓபன் டாக்!!

ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு எப்படி ஒத்துக்கொண்டார் என எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று மனம் திறந்து பேசியிருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

2021ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பைக்கு பிறகு, தலைமை பயிற்சியாளராக இருந்து வந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.  இந்நிலையில் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை நியமிக்க, பிசிசிஐ கடந்த சில மாதங்களாக தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தது.

இறுதியாக ராகுல் டிராவிட் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிவரும் டி20 தொடரின் போது பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் முதலாவது தேர்வு இல்லை. இவருக்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பிசிசிஐ அதிகாரிகள் அணுகியதாகவும் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி மிகவும் வற்புறுத்தியதாகவும் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்திருக்கிறார். 

மேலும் இப்பதவிக்கு ராகுல் டிராவிட் எப்படி ஒத்துக் கொண்டார்? டிராவிட்டின் குழந்தைகள் சிறு வயதினராக இருக்கின்றனர், அவர்களுடன் நேரம் செலவழிக்க இவருக்கு எண்ணம் இல்லையா?? என ராகுல் டிராவிட் குறித்தும் கருத்து தெரிவித்திருக்கிறார்.

ரிக்கி பாண்டிங் கூறுகையில், “ராகுல் இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளிக்கிறது.  இந்தியாவின்  19-வயதுக்குட்பட்டோருக்கான அணியில் அவர் எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை நாங்கள் இருவரும் பலமுறை பேசியிருக்கிறோம். அவர் தனது குடும்பத்தினருடன் எப்படி நேரத்தை செலவிடுகிறார் என்பது எனக்கு தெரியவில்லை.

ஆனால் அவருக்கு சிறு வயதில் குழந்தைகள் இருக்கின்றனர் என நன்கு அறிவேன். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொண்டால், குடும்பத்தினருடன் செலவழிக்க நேரம் இருக்காது. ஆகையால் இப்பதவியை அவர் ஏற்றுக் கொண்டது எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது.” என்றார்.

மேலும் தன்னிடம் பிசிசிஐ அணுகியது குறித்து பேசிய அவர், “ஐபிஎல் போட்டிகளின் போது என்னிடம் சில அதிகாரிகள் பேச முற்பட்டனர். என்னை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி வற்புறுத்தினர். அதற்காக அவர்கள் எந்த அளவிற்கு வளைந்து கொடுத்தார்கள் என்பதை நான் நன்கு புரிந்து கொண்டேன்.

ஏற்கனவே டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி மற்றும் ஆஸ்திரேலியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பணிபுரிவது என எனது வேலைப்பளு மிகவும் அதிகமாக இருக்கிறது. மேலும் நான் குடும்பத்தினருடன் செலவழிக்க நேரத்தை நிச்சயம் எடுத்துக்கொள்வேன். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பு மிகவும் வேலைப்பளு மிகுந்த ஒன்று. இப்போது இருக்கும் மனநிலையில் அதை ஏற்றுக்கொள்ள எனக்குத் தோன்றவில்லை.” என்றார்.