மிகச் சிறந்த அணியை மீண்டும் கட்டமைப்போம் என உறுதியாக தெரிவித்திருக்கிறார் ரோகித் சர்மா.
ஐபிஎல் தொடரின் 15வது சீசனுக்கு முன்பாக, ஐபிஎல் மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது. ஏலத்தில் பங்கேற்பதற்கு முன்பு, ஒவ்வொரு அணியும் அதிகபட்சம் நான்கு வீரர்களை மட்டுமே தக்கவைத்துக்கொள்ள முடியும். இதன் அடிப்படையில், மும்பை இந்தியன்ஸ் அணி முதலாவதாக ரோகித் சர்மாவை தக்க வைத்தது. அடுத்ததாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரையும் தக்கவைத்துக் கொண்டது.
அனைத்திற்கும் மேலாக வெறும் 6 கோடி ரூபாய் மட்டுமே கொடுத்து பொல்லார்டு தக்க வைக்கப்பட்டுள்ளார். இது மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இசான் கிசான், ஹார்திக் பாண்டியா, டிரென்ட் போல்ட் போன்ற முன்னணி வீரர்கள் தக்கவைக்கப்படவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது ஏலத்தில் பங்கேற்க வெறும் 48 கோடி ரூபாய் மட்டுமே இருக்கிறது. முன்னணி வீரர்களை மீண்டும் அணியில் எடுப்பது சாத்தியமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது.
இந்நிலையில் தக்க ல்வைக்கப்பட்ட வீரர்கள் பற்றி பேசிய ரோகித் சர்மா கூறுகையில், “மிகவும் உறுதியான ஒரு அணியாக நாங்கள் அமைந்திருந்தோம். தற்போது முக்கியமான வீரர்கள் அணியில் இல்லை என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இருப்பினும் நான்கு சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். அதில் நானும் இருக்கிறேன். இதனை சுற்றி மீண்டும் வலுவான அணியை நிச்சயம் கட்டமைப்போம். அணியின் வல்லுநர்கள் வீரர்கள் பற்றி தொடர்ந்து புள்ளிவிவரங்களை எடுத்து வருகின்றனர். ஐபிஎல் ஏலத்தில் சரியான வீரர்களை நிச்சயம் எடுப்போம்.
பாண்டியா, டிரென்ட் போல்ட் போன்ற வீரர்கள் அணியில் இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அவர்கள் இந்த அணியுடன் பல நினைவுகளை பகிர்ந்திருக்கின்றனர். அவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்திருக்கிறது. இருப்பினும் விதிமுறைகள் அனைத்திற்கும் இடம்கொடுக்க வேண்டும். எடுக்கப்பட்டிருக்கும் 4 வீரர்கள் வைத்து ஏனைய விரர்களை கட்டமைப்பது எங்களது அடுத்த இலக்காக உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி மீண்டும் வலுவான அணியாக உருவெடுக்கும்.” என்று நம்பிக்கை அளித்தார்.
ஹர்திக் பாண்டியா அணியில் எடுக்கப்படாதது குறித்து பேசிய அவர், “மும்பை அணியில் இடம்பெற்று இந்திய அணிக்காக விளையாட தேர்வான சில வீரர்களில் இவரும் ஒருவர். இவரின் முக்கியத்துவம் எங்களுக்கும் புரிகிறது. விட்டுக்கொடுக்க மனம் இல்லை. இருப்பினும் விதிமுறைகள் மற்றும் மற்ற காரணங்களுக்காக அவரை தக்க வைக்கவில்லை. மீதம் உள்ளவற்றை ஏலம் நடத்தும் பொழுது பார்த்துக் கொள்ளலாம்.” என்று தெரிவித்தார்.