“ரோஹித் சர்மாவிடம் நான் இதை கனவிலும் எதிர்பார்க்கவில்லை.. அவரு ரொம்பவே ஸ்பெசல்” ; ராகுல் டிராவிட் ஓபன் டாக்!!

புதிய தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற ராகுல் டிராவிட் ரோகித்சர்மா குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.

டி20 உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணியுடன் விளையாட இருக்கிறது. நவம்பர் 17ஆம் தேதி துவங்கும் முதல் டி20 போட்டியில் விளையாடுவதற்கு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொடரில் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை வகிக்கிறார். புதிதாக தலைமை பேச்சாளர் பொறுப்பேற்றுள்ள ராகுல் டிராவிட் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதை நேற்றைய தினம் மேற்பார்வையிட்டார். அதன்பிறகு ரோஹித் சர்மாவிடம் நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார்.  

பின்னர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ராகுல் டிராவிட் மற்றும் ரோகித் சர்மா இருவரும் பங்கேற்று பல விஷயங்களை பகிர்ந்து கொண்டனர். ரோகித் சர்மா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார் ராகுல் டிராவிட். அவர் கூறுகையில், 

“ரோகித் சர்மா எத்தகைய சிறப்பான வீரர் என நாம் அனைவரும் அறிவோம். பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை கொடுத்து மூன்று வித போட்டிகளிலும் விளையாடி வருகிறார். தனிப்பட்ட முறையில் ரோஹித் சர்மா இவ்வளவு உயரம் வளர்ந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கடந்த 14 வருடங்களாக அவரை நான் பார்த்து வருகிறேன். இந்த விளையாட்டிற்கும் நாட்டிற்கும் கிடைத்த சொத்து என சந்தேகமின்றி கூறுவேன். 

ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பு எந்த அளவிற்கு திறம்பட இருந்து வந்துள்ளது என்பதை ஐபிஎல் போட்டிகளில் நாம் கண்டிருப்போம். மும்பை அணிக்கு ஐந்து முறை கோப்பைகளை வென்று தந்திருக்கிறார். அதேபோன்று வெற்றிகரமான கேப்டன் பொறுப்பை இந்திய அணியிலும் நிச்சயம் தொடர்வார்.” என்று புகழாரம் சூட்டினார்.

மும்பை அணிக்கு கடந்த பல ஆண்டுகளாக சிறப்பாக கேப்டன் பொறுப்பு வகித்து வரும் ரோகித் சர்மா, தற்போது டி20 போட்டிகளின் கேப்டனாக வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளித்தாலும், அவரின் செயல்பாடு மீது அனைவரின் கவனமும் மிகுந்த எதிர்பார்ப்பும் இருக்கிறது.

மேலும் பல கேள்விகளுக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பதில் அளித்த ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் வீரர்களின் மன நலம் மற்றும் உடல் நலம் மற்றும் சரியான நேரத்தில் ஓய்வு ஆகியவை குறித்தும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.