ரோகித், அக்ஷர் அபாரம்… 3-0 என வெள்ளையடித்து வீட்டுக்கு அனுப்பிய இந்தியா!!!

நியூசிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து, டி20 தொடரை 3-0 என கைப்பற்றியது இந்திய அணி. 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ரோகித் சர்மா, இம்முறை பேட்டிங் செய்ய முடிவு செய்து களமிறங்கினார். ரோஹித் சர்மா இஷான் கிஷன் ஜோடி பவர்பிளே ஓவர்களில் வானவேடிக்கை காட்டியது. 6 ஓவர்கள் முடிவில் 69 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா

அடுத்ததாக, இந்திய அணிக்கு சரசரவென விக்கெட்டுகள் சரிய, மறுமுனையில் ரோகித் சர்மா அரைசதம் கடந்தார். 5 பவுண்டரிகள் 3 சிக்ஸர்கள் உட்பட 31 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் (29), ஷ்ரேயாஸ் ஐயர்(25), வெங்கடேஷ்(19) ஆகியோரும் நன்கு விளையாடி ஆட்டமிழக்க, கீழ்வரிசையில் ஹர்ஷல் 18(11), தீபக் சஹர் 21(8) இருவரும் அபாரமாக ஆடி 180 ரன்கள் கடக்க உதவினர்.

20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட் இழப்பிற்கு 184 ரன்கள் அடித்திருந்தது. அதிகபட்சமாக, சான்ட்னர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். மீதமுள்ள பந்துவீச்சாளர்கள் தலா 1 விக்கெட் எடுத்திருந்தனர்.

இலக்கை துரத்திய நியூசிலாந்து அணிக்கு கப்தில் நன்கு விளையாடினாலும் ஏனைய வீரர்கள் வந்த வேகத்தில் வெளியேறினர். எவராலும் கப்தில் உடன் நிலையான பார்ட்னர்ஷிப் அமைக்க முடியவில்லை. அதிகபட்சமாக, கப்தில் 36 பந்துகளில் 51 ரன்கள் அடித்தார். இதில் தலா 4 பவுண்டரிகள் 4 சிக்ஸர்கள் அடங்கும்.

மீதமுள்ள வீரர்களில் லாகி பெர்குஷன்(14), செய்போர்ட்(17) இருவர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்கத்திற்கு ஆட்டமிழக்க, 17.2 ஓவர்களில் 111 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசிலாந்து. 

இந்திய அணி 73 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் 3-0 என்கிற கணக்கில் நியூசிலாந்து அணியை டி20 தொடரில் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா.

அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகள் எடுத்த அக்ஷர் படேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 2 அரைசதங்கள் உட்பட இத்தொடரில் அதிக ரன்கள் அடித்த ரோகித் சர்மா, தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.