ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் இருவரையும் இதற்காகத்தான் தக்க வைக்கவில்லை என்று விளக்கத்துடன் கூறியிருக்கிறார் குமார் சங்கக்காரா.
ஐபிஎல் தொடரின் 15வது சீசன் துவங்குவதற்கு முன்பாக ஒவ்வொரு அணியின் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை நவம்பர் 30-ஆம் தேதி இரவு வெளியிட்டது. சில அணிகள் தங்களது முன்னணி வீரர்களை எதன் காரணமாகவும் வெளியே விடாமல் தக்க வைத்துக்கொண்டுள்ளனர். மேலும் சில அணிகள் முன்னணி வீரர்களை வெளியே விட்டுவிட்டு புதிய அணியை கட்டமைக்க பல திட்டங்களை வகுத்து வருகின்றனர்.
அந்த வகையில் பஞ்சாப் அணி, தனது முன்னணி வீரரான கேஎல் ராகுலை வெளியே விட்டிருக்கிறது. அதேபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, வார்னர், பேர்ஸ்டோ மற்றும் ரஷித் கான் போன்ற முன்னணி வீரர்களை வெளியே விட்டிருக்கிறது. இந்த வரிசையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு முன்னணி ஆல்ரவுண்டர் ஆகவும், மற்றுமொரு கேப்டனாகவும் இருந்து வந்த பென் ஸ்டோக்ஸ் தக்க வைக்கப்படவில்லை. அதேபோல் உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சோப்ரா ஆர்சரும் தக்க வைக்கப்படவில்லை. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
ஏனெனில் இவர்கள் இருவரும் ஏலத்தில் குறைந்தபட்சம் 10 கோடிக்கு செல்வர். இத்தகைய வீரர்களை வெளியே விட்டதற்கு முக்கியமான காரணம் என்ன என்பது குறித்து விளக்கமாக தெரிவித்திருக்கிறார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனர் குமார் சங்கக்காரா.
“பென் ஸ்டோக்ஸ் சிறந்த ஆல்-ரவுண்டராக பல ஆண்டுகள் இருந்து வருகிறார். ராஜஸ்தான் அணிக்கு முக்கியமான போட்டிகளில் வெற்றியை பெற்றுத் தந்திருக்கிறார். ஆனால் அவரது உடல் தகுதி எந்த அளவிற்கு இருக்கிறது என்பது குறித்து சந்தேகம் எழுந்திருக்கிறது. அதேநேரம் தொடர் முழுவதும் அவர் அணிக்காக விளையாடுவாரா? என்பதும் சந்தேகம் எழுந்திருக்கிறது. ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் முழுவதுமாக அணியில் இருக்க வேண்டும். சில போட்டிகளில் இல்லாமல் போனால் பெருத்த பின்னடைவு ஏற்படும். அவரை எடுக்காமல் விட்டதற்கு நிச்சயம் வருத்தமாக இருக்கும் என நானும் உணர்வேன். அணியின் எதிர்காலம் முக்கியம் என்பதை அவர் உணர்ந்து கொள்வார்.” என்றார்.
மேலும் பேசிய அவர், ஆர்ச்சர் எத்தகைய சிறந்த பந்துவீச்சாளர் என்பது தெரியும். இந்தியா மட்டுமல்ல, பல நாடுகளில் நடைபெறும் லீக் போட்டிகளில் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார். ஆனாலும் சமீபத்தில் அவரது உடல்நிலை முழுத் தகுதியுடன் இல்லை. அடிக்கடி காயத்துடன் வெளியில் இருக்கிறார். வீரர்களின் திறமை மீது எந்த வித குறைபாடும் இல்லை. அவர்களுக்கு முழு உடல் தகுதி இருப்பதே முக்கியம் எனக் கருதி இத்தகைய முடிவினை எடுத்துள்ளோம்.” என்றார்.