‘இவரோட மதிப்பு தெரியாம நீங்க தப்பு பண்றீங்க…! இல்லாம போனாத்தான் புரியும்’; இந்திய வீரருக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஆதரவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் லிமிடெட் ஓவர் போட்டிகளில் இருந்து குறிப்பாக ஒருநாள் போட்டியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா நியமிக்கப்பட்டிருந்தார். இந்த விஷயத்தை பிசிசிஐ கையாண்ட விதம் மிகவும் மோசமாக இருந்தது என்று பலரும் விமர்சனத்தை தெரிவித்தனர்.

‘அப்படி ஒன்றும் நடக்கவில்லை. விராட்கோலிக்கு முறையாக அறிவிப்புகள் கொடுக்கப்பட்டது.’ என்று பிசிசிஐ தரப்பு தெரிவித்தது. ஆனால் பிசிசிஐ இந்த விஷயத்தில் உண்மையை கூறவில்லை என்று விராட்கோலி சமீபத்திய பேட்டி ஒன்றில், நடந்த விஷயங்கள் அத்தனையையும் தெளிவுபடுத்தினார். இதனால் விராட் கோலி மற்றும் பிசிசிஐ இடையிலான விவகாரம் மேலும் சூடுபிடிக்க துவங்கியது.

விரைவில் தென்னாபிரிக்கா அணியுடனான டெஸ்ட் தொடர் நடைபெற இருப்பதால், இவை அனைத்தையும் ஓரங்கட்டிவிட்டு விராட் கோலி மற்றும் சக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். வருகிற 26-ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி துவங்க இருக்கிறது.

விராட் கோலி டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் முன்பை விட கீழே இறங்கியுள்ளார். ஆகையால் தனிப்பட்ட முறையிலும் கேப்டன் பொறுப்பிலும் நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இதற்கிடையில் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய விதம் மற்றும் பிசிசிஐ இந்த விவகாரத்தை கையாண்ட விதம் என இரண்டையும் விமர்சித்துள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி.

“விராத் கோலியின் கேப்டன் பொறுப்பு மாற்றப்பட்டது குறித்து எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை. கிரிக்கெட் வாரியம், அணிக்கு எது தேவையோ அதற்கு ஏற்ற முடிவை எடுக்கும். ஆனால் அதனை கேப்டனிடம் முறையாக தெளிவுபடுத்த வேண்டும்.

மேலும் இதன் காரணமாக நீக்கினோம் என்பதையும் தெளிவாக குறிப்பிட்டிருக்க வேண்டும். விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய விவகாரத்தில் பிசிசிஐ மிகவும் மோசமாக கையாண்டுள்ளது. இதனால் தான் விராட்கோலி கேப்டசின்ஷிப் விவகாரம் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. 

அணியின் வெற்றிக்கு என்ன செய்யலாம்?, வருங்காலத்தில் என்னென்ன திட்டங்கள் வகுக்கப்பட இருக்கின்றன? என்பனவற்றை கேப்டனிடம் தெளிவாக  ஆலோசித்த பின்னர், விராட் கோலியிடம் உங்களை நீக்குகிறோம் என தெரிவித்திருந்தால் அவரே முன்வந்து விலகியிருப்பார்.

விராத் கோலி போன்ற வீரர் தனது அணியில் இருக்க மாட்டார்களா? என ஒவ்வொரு அணியும் ஏங்கிக்கொண்டிருக்கிறது. அவரின் அருமையை புரிந்து கொண்டு பிசிசிஐ நல்ல முறையில் நடத்த வேண்டும். விராத் கோலிக்கு முதிர்ச்சியான மனநிலை இருக்கிறது. எடுத்துச் சொன்னால் புரிந்து கொள்வார். இந்த விவகாரம் இன்னும் சிறப்பாக கையாளப்பட்டிருக்க வேண்டும் என்பதே எனது ஆதங்கம்.” என்றார்.