தென்னாப்பிரிக்கா செல்லும் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு; ரஹானே இல்லை… இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் இவர்தான்!!

தென்னாப்பிரிக்கா செல்லும் 18 பேர் கொண்ட இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோகித் சர்மா புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவுற்ற உடன் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு, முதல் கட்டமாக 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் புதிய வகை கொரோனா  அதிதீவிரமாக பரவி வருவதால், இந்த தொடர் நடைபெறுமா? இல்லையா? என்கிற சந்தேகங்கள் நிலவி வந்தது. 

தொடர் குறித்து தென்னாப்பிரிக்கா சுகாதாரத்துறை மற்றும் கிரிக்கெட் வாரியத்துடன் பிசிசிஐ தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்தி வந்தன. முதலில் தொடர் நடைபெறுவது சந்தேகமாக இருந்ததால், வீரர்கள் அறிவிப்பு தள்ளிச் சென்றது. பின்னர் ஓரிரு தினங்களுக்கு முன்பு இந்திய தலைமை தேர்வுக்குழு அதிகாரிகள் கூட்டத்தில், வீரர்கள் தேர்வு பற்றிய ஆலோசனைகள் நடத்தப்பட்டு, இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

தென்னாபிரிக்க தொடரில் சுப்மன் கில், ஜடேஜா, அக்ஷர் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. இவர்கள் இந்திய தேசியக் அகடமிக்கு, சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளனர். நியூசிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் அய்யர் தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணியில் இணைக்கப்பட்டிருக்கிறார். மேலும், நியூசிலாந்து தொடரில் விடுபட்டு இருந்த ஹனுமா விஹாரி மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ளார். 

ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் மீண்டும் அணியில் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்துக்கு எதிராக நன்றாக விளையாடிய ஜெயந்த் யாதவ், சிராஜ் ஆகியோர் சேர்க்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. கேஎல் ராகுல் குறித்த சந்தேகம் இருந்து வந்த நிலையில், அவர் குணமடைந்து மீண்டும் தென்னாபிரிக்க செல்லும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

தென்னாபிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் 18 வீரர்கள் கொண்ட இந்திய அணி பட்டியல்:

விராட் கோஹ்லி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே எல் ராகுல், மயங்க் அகர்வால், சேடேஷ்வர் புஜாரா, அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த் (கீப்பர்), விருத்திமான் சாஹா (கீப்பர்), ஆர் அஷ்வின், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், ஷரத்துல் தாகூர், இஷாந்த் சர்மா.