இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிகளைப் பெற்றுத் தருவார்கள் என புகழாரம் சூட்டியிருக்கிறார் தென் ஆப்பிரிக்க அணியின் ஜாம்பவான் டேல் ஸ்டெய்ன்.
தென் ஆப்பிரிக்க அணியுடன் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வெற்றியையும் பெற்று இருக்கிறது. செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த மைதானத்தில் தனது முதல் வெற்றியை இந்தியா பதிவு செய்திருக்கிறது.
தொடர்ச்சியாக, இந்திய அணி வெளிநாட்டு மைதானங்களில் அபாரமாக செயல்பட்டு வருவதை பலரும் புகழ்ந்து வருகின்றனர். இதற்கு முன்னர் வெற்றி பெற முடியாத, இங்கிலாந்தின் கோட்டையாக இருக்கும் லார்ட்ஸ் மைதானம், ஆஸ்திரேலியாவின் கோட்டையாக கருதப்படும் கப்பா மைதானம், தற்போது தென் ஆப்பிரிக்க அணியின் கோட்டையான செஞ்சூரியன் மைதானம் என பிரசித்தி பெற்ற மைதானங்களில் இந்திய அணி வெற்றியை குவித்து, வரலாற்றை மாற்றி எழுதி வருகிறது.
இந்திய அணியின் இத்தகைய வெற்றிக்கு முக்கிய காரணமாக வேகப்பந்து வீச்சு டிபார்ட்மென்ட் இருக்கிறது. முகமது சமி, இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், தற்போது புதிதாக இணைந்திருக்கும் முகமது சிராஜ் என வரிசையாக தாக்குதலை ஏற்படுத்தக் கூடிய அளவிற்கு இந்திய வேகப்பந்து வீச்சு இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் முகமது சமி மிகச் சிறப்பாக பந்துவீசி 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அனைத்துமே முக்கியமான கட்டத்தில் எடுக்கப்பட்டவை.
முதல் இன்னிங்சில், பும்ராவிற்கு காலில் ஏற்பட்ட பிசகு காரணமாக சரியாக பந்து வீச முடியவில்லை. இரண்டாவது இன்னிங்சில் அவர் தாக்கம் ஏற்படுத்தி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இந்நிலையில் இந்திய அணியின் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை குறிப்பிட்டு, வரும் போட்டிகளில் இவர்கள் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும், முதல் டெஸ்ட் போட்டியில் எப்படி செயல் பட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்திருக்கிறார் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன்.
“ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சமி இருவரும் மிகச்சிறந்த பார்மில் இருக்கின்றனர். முதல் டெஸ்ட் போட்டியில் சரியான லென்த் மற்றும் லைனில் பந்துவீசினார்கள். இந்த மைதானத்தில் முதல்நாள் பந்து வீச்சுக்கும், மூன்றாவது நான்காவது ஐந்தாவது நாளில் இருக்கும் பந்துவீச்சுக்கும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். முதல் நாள் சற்று மெதுவாக பந்து வரும். ஆனால் கடைசி நாட்களில் வேகமாக இருக்கும். இதனை சரியாகப் புரிந்துகொண்டு, முகமது சமி அபாரமாக பந்துவீசி விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இன்னும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், பும்ராவின் பந்துவீச்சு ஆக்சன் அவருக்கு பலமாக இருக்கிறது. முகமது சமி பந்துவீசும்போது கையை திருப்பும் தன்மை அவருக்கு பலமாக இருக்கிறது. இருவரும் தங்களது தனித் திறமையைப் பயன்படுத்தி வெற்றிகளைப் பெற உதவி வருகின்றனர்.” என புகழ்ந்து தள்ளினார்.