ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக இந்த இரண்டு முக்கியமான வீரர்களை தக்கவைப்பதாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த தொடர் துவங்குவதற்கு முன்பாக டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடத்தப்பட இருக்கிறது. இதில் பங்கேற்பதற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் ஏற்கனவே இருக்கும் அணியிலிருந்து 2 இந்திய வீரர்கள் மற்றும் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்கள் மற்றும் ஒரு வெளிநாட்டு வீரர் என்கிற கணக்கில் நான்கு வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம்.
வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் தக்க வைக்கும் வீரர்களை உறுதி செய்து, ஐபிஎல் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க பட்டியலை வேண்டும். ஒவ்வொரு அணியும் தங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இதுகுறித்த தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
மும்பை அணியின் கேப்டனாக இருந்து வரும் ரோகித் சர்மா மற்றும் முன்னணி பந்துவீச்சாளராக இருந்து வரும் ஜஸ்பிரீட் பும்ரா இருவரையும் தக்க வைக்க இருப்பதாக தெரியவந்துள்ளன. மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு சூரியகுமார் யாதவ், இஷான் கிசன், ஹர்டிக் பாண்டியா மற்றும் பொல்லார்டு ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
வெளிநாட்டு வீரர் இடத்தில் ஒரு வீரராக பொல்லார்ட் நிச்சயம் இருப்பார் என தெரிகிறது. அதே நேரம் இன்னொரு வெளிநாட்டு வீரருக்கு செல்வார்களா? இல்லை, இந்திய வீரர்களை தக்க வைக்க முயற்சிப்பார்களா? என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பொறுத்தவரை, கேப்டன் தோனியை நிச்சயம் தக்க வைப்பார்கள் என தெரிந்துவிட்டது. அதேபோல் மீதமுள்ள 1 அல்லது 2 இந்திய வீரர்கள் இடத்தில் ருத்துராஜ் கெய்க்வாட் இருப்பார் என்றும் அதிகாரமற்ற தகவல்கள் வருகின்றன. அதேபோல் மொயீன் அலி மற்றும் சாம் கரண் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இருவரில் ஒருவர் தக்கவைக்கப்படலாம். சுரேஷ் ரெய்னா மற்றும் ஜடேஜா இருவரின் இடமும் தற்போதுவரை சந்தேகமாகவே இருப்பதும் குறிப்பிடத்தக்கது.