விராட் கோலி ராஜினாமா செய்வார் என காத்திருந்த பிசிசிஐ.. நடக்காததால் இந்த திடீர் முடிவாம்; வெளியான திடுக்கிடும் உண்மைகள்..

விராட் கோலி ராஜினாமா செய்துவிடுவார் என கிட்டத்தட்ட 48 மணி நேரம் காத்திருந்ததாகவும், அதன் பின்னரே இத்தகைய முடிவு எடுக்கப்பட்டதாகவும் பிசிசிஐ வட்டார தகவல்கள் வெளிவருகின்றன.

இந்திய அணியில் மூன்றுவித கேப்டன் பொறுப்பில் இருந்து வந்த விராட் கோலி டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக உலக கோப்பை தொடர் முடிவுற்ற உடன் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்து, விலகினார். இந்திய அணி சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. அதன் பிறகு நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது, டி20 போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மா ஏற்றுக்கொண்டார். ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு குறித்து சந்தேகங்கள் தொடர்ந்து நிலவி வந்தன.

2023 ஆம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை கருத்தில்கொண்டு, ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு குறித்து முடிவு மேற்கொள்ளப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தொடர்ந்து தகவல்கள் வந்தன. அதேநேரம் லிமிட்டட் ஓவர் போட்டிகளுக்கு ஒரு கேப்டன் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரு கேப்டன் என்கிற முடிவு எடுக்கப்படலாம் என்ற தகவல்களும் வந்தன. 

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான வீரர்களை அறிவிக்கும் நேரத்தில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்படும் என்று இந்திய தேர்தல் தலைமை அதிகாரி சேத்தன் சர்மா தெரிவித்தார். அதற்கேற்றவாறு நேற்றைய தினம் தென்னாபிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் பங்கேற்க இருக்கும் 18 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் விராட் கோலி கேப்டனாக நீடிக்கிறார். துணை கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதே அறிக்கையில், இனி ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பில் இருந்த விராட் கோலி விடுவிக்கப்பட்டு, ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “டி20 உலக கோப்பை முடிவுற்ற உடன் ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம்.

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய வீரர்கள் பட்டியல் தயாரிக்கும் 48 மணி நேரத்திற்கு முன்பு வரை விராட்கோலி ராஜினாமா செய்வது குறித்து முடிவு செய்வார். அதனை அவரே வெளியில் தெரிவிப்பார் என்று நினைத்திருந்தோம். ஆனால் அது நடக்கவில்லை. ஆகையால் ஆலோசனைக்குழு கூட்டப்பட்டு இது குறித்த முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதில் லிமிடெட் அவர்களுக்கு ஒரு கேப்டன் இருந்தால் நன்றாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளுக்கு தனி கேப்டன் இருந்தால் நன்றாக இருக்கும். வீரர்களின் மன நிலையும் அதற்கு ஏற்றவாறு இருக்கும் என்று முடிவு செய்தோம். சரியாக 49வது மணிநேரம் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டனாக இருப்பார் என்று அறிவித்துள்ளோம்.” என அவர் தனியார் பத்திரிக்கைக்கு அளித்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.