“வார்னர நாங்க வெளிய உக்கார வைச்ச காரணமே வேற.. நம்புங்க”; யாரும் அறியாத உண்மையை வெளியிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பயிற்சியாளர்!!

இதற்காகத்தான் ஐபிஎல் போட்டிகளின்போது வார்னரை நாங்கள் வெளியில் அமர்த்தினோம் என சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உதவி பயிற்சியாளர் பிராட் ஹேடின் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் தொடர்களில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கடந்த சில ஆண்டுகளாக டேவிட் வார்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து வருகிறார். நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் வார்னர் சற்று மோசமான ஃபார்மில் இருந்தார். ஒற்றை இலக்க ரன்களில் தொடர்ந்து ஆட்டம் இழந்து வந்ததால் அவரது கேப்டன் பொறுப்பு கேன் வில்லியம்சன் வசம் கொடுக்கப்பட்டது. 

அதேபோல் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதியில் மீண்டும் கேப்டன் பொறுப்பு வகித்தார் வார்னர். ஒரு போட்டியில் வரலாறு காணாத வகையில் கோல்டன் டக் ஆனார். அதற்கு அடுத்த போட்டியில் வெறும் இரண்டு ரன்களுக்கு ஆட்டம் இழக்க, மீண்டும் அவரது கேப்டன் பொறுப்பு பறிக்கப்பட்டு கேன் வில்லியம்சனிடம் கொடுக்கப்பட்டது.  மேலும் சில போட்டிகளில் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்ததால் அடுத்தடுத்த போட்டிகளுக்கு வெளியில் அமர்த்தப்பட்டார். இந்த சம்பவம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடந்துமுடிந்த ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறியது. 

அதன்பிறகு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்ற வார்னர் ஆஸ்திரேலிய அணிக்கு அசத்தலான துவக்கம் அமைத்துக் கொடுத்து வந்தார். அவர் 7 போட்டிகளில் 3 அரைசதங்கள் உட்பட 289 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார். அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதன் காரணமாக அவருக்கு தொடர் நாயகன் விருது கொடுக்கப்பட்டது. 

ஒரு மாதத்திற்கு முன்பு ஐபிஎல் போட்டிகளின்போது வெளியில் அமர்த்தப்பட்ட வார்னர் தற்போது மோசமான ஃபார்மில் இருந்து மீண்டு வந்து, டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு அபாரமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருது பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் வார்னர் வெளியே அமர்த்தப்பட்டது ஏன் என தொடர்ந்து கேள்விகள் எழுந்த வண்ணம் இருந்தன. இதற்கு பதிலளித்த சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உதவி பயிற்சியாளர் பிராட் ஹேடின் கூறுகையில், “அவர் தனது தனிப்பட்ட பார்ம் காரணமாக வெளியில் அமர்த்தப்படவில்லை. மாறாக ஐபிஎல் தொடரின் முதல் பாதி மற்றும் இரண்டாவது பாதிக்கு இடையில் நீண்ட இடைவெளி இருந்தது. இடைப்பட்ட காலத்தில் ஆஸ்திரேலிய அணி வங்கதேசம் மற்றும் வெஸ்ட்இண்டீஸ் தொடர்களில் விளையாடியது. அப்போது வார்னர் ஆஸ்திரேலியா அணியில் இல்லை. நீண்டகாலமாக வார்னர் பயிற்சியில்  ஈடுபடவில்லை. போதுமான அளவிற்கு வார்னர் பயிற்சி பெறாத காரணத்தால் மட்டுமே வெளியில் அமர்த்தப்பட்டார்.” என்றார்.