நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் நாளை (மார்ச் 31) மாலை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து, இரவு நடைபெறும் முதல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.


சென்னை சூப்பர் கிங்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ் அணிகளின் உத்தேச லெவன் வீரர்களின் பட்டியல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தலைமையிலான அணியில் ருதுராஜ் கெய்க்வாட், டேவன் கான்வே, அம்பதி ராயுடு, ரஹானே, பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், நிஷாந்த் சிந்து ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.


குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில், சுப்மன் கில், டேவிட் மில்லர், கேன் வில்லியம்சன், விஜய் சங்கர், ராகுல் திவாடியா, ரஷீத் கான், சிவம் மாவி, ஜோஸுவா லிட்டில், முகமது ஷமி, விருத்திமான் சாஹா ஆகியோர் இடம்பெற வாய்ப்புள்ளது.
கடந்த ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதிய இரண்டு போட்டிகளிலும் அபார வெற்றி பெற்றது. இந்த தோல்விகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குஜராத் மாநிலத்தில் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தும் என்றும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.


கடந்த மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் ஏழு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலே விற்றுத் தீர்ந்துள்ளது.
அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, நடப்பு ஐ.பி.எல். தொடருடன் ஓய்வு பெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அது குறித்த அறிவிப்பையும் சேப்பாக்கம் மைதானத்தில் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. மற்றொரு புறம் ஐ.பி.எல். கோப்பையை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, எந்த ஐ.பி.எல். சீசனிலும் இல்லாத வகையில் வீரர்கள், காயம் மற்றும் சொந்த காரணங்கள் காரணமாக அடுத்தடுத்து விலகி வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.